உள்ளூர் செய்திகள்

கோவையில் கல்வி உதவித்தொகை தருவதாக ரூ.7 லட்சம் மோசடி

Published On 2023-06-17 14:57 IST   |   Update On 2023-06-17 14:57:00 IST
  • கல்வி உதவி தொகை வழங்குவது தொடர்பாக பேசுவதற்கு தான் நான் போன் செய்துள்ளேன் என்றனர்.
  • புகாரின் பேரில் மாநகர சைபர் குரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் அந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

கோவை,

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 மற்றும் பிளஸ்-2 படித்து வரும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஒரு போன்கால் வந்தது.

அந்த போனில் பேசிய மர்மநபர், நான் அரசு அலுவலராக உள்ளேன். கல்வி உதவி தொகை வழங்குவது தொடர்பாக பேசுவதற்கு தான் நான் போன் செய்துள்ளேன். உங்களது மகன், மகள்களுக்கு அரசு மூலமாக உதவித்தொகை வழங்க உள்ளோம்.

உதவி தொகையை நாங்கள் போன் மூலமே அனுப்பி விடுவோம். பணம் அனுப்பியதற்கான கியூ ஆர் கோர்டு உங்களது செல்போன் வாட்ஸ்-அப் எண்ணில் அனுப்பி விடுவோம். அதனை தொட்டால் உங்களுக்கு பணம் வந்து விடும் என தெரிவித்தனர்.

இதனை உண்மை என நம்பிய பெற்றோரும், அந்த நம்பரை செல்போனில் சேமித்து விட்டு, அந்த வாட்ஸ்-அப் பக்கத்திற்கு சென்றனர். அந்த கும்பல், மக்களை நம்ப வைப்பதற்காக தங்கள் வாட்ஸ் அப் முகப்பு பக்கத்தில் தமிழ்நாடு அரசு லோகோவை வைத்திருந்தனர்.

இதனால் உண்மையிலேயே நம்மை தொடர்பு கொண்டு உதவி தொகை தருவதாக கூறியது அரசு அதிகாரிகள் என பெற்றோர் நினைத்து விட்டனர். தொடர்ந்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வாட்ஸ்-அப் மூலமும் மாணவர்களின் பெற்றோரிடம் பேசினார்.

இன்னும் சிறிது நேரத்தில் உங்களுக்கு ஒரு கியூ ஆர் கோடு வரும். அது வந்தால் உங்களுக்கு பணம் வந்துவிட்டது என அர்த்தம் என தெரிவித்த னர்.

சொன்ன படியே அந்த கும்பல் அனைவரின் வாட்ஸ்அப்பு க்கு கியூ ஆர்கோடு அனுப்பி விட்டு பணம் அனுப்பி விட்டோம். அந்த கியூ ஆர் கோடை கிளிக் செய்தால் பணம் வந்ததை நீங்கள் பார்த்து கொள்ளலாம் என தெரிவித்தனர்.

பெற்றோரும் கல்வி உதவி தொகை கிடைக்கும் ஆசையில் அந்த கியூ ஆர் கோடை கிளிக் செய்தனர். மாணவர்களின் பெற்றோர் அந்த கியூ ஆர்கோடை கிளிக் செய்த அடுத்த நொடியில், அவர்களது வங்கி கணக்கில் இருந்த மொத்த பணமும் பறிபோய்விட்டது.

தங்களுக்கு பணம் கிடைக்கும் என நினைத்த பெற்றோர்களுக்கு தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கோவையை சேர்ந்த 7 பேர் தங்களிடம் ஒரு கும்பல் கல்வி உதவித்தொகை தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்து விட்டதாக கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் மாநகர சைபர் குரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் அந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர். முதலில் மாணவர்களின் பெற்றோரிடம் கல்வி உதவித்தொகை தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது யார் என்பதை கண்டறியும் பணியில் இறங்கினர்.

விசாரணையில் மோசடியில் ஈடுபட்ட கும்பல் நாமக்கல் மாவட்டம் சவுரிபாளையத்தை சேர்ந்த டேவிட் (வயது32), லாரன்ஸ்ராஜ்(28), ஜேம்ஸ் (30), எட்வின் சகாயராஜ் (31), மாணிக்கம் (34) என்பது தெரியவந்தது. இவர்கள், கோவை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்டோரிடம் இதுபோல ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் எங்கு பதுங்கி இருக்கி ன்றனர் என்பதை செல்போனை வைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நாமக்கல்லில் பதுங்கி இருப்பது தெரி யவரவே போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அங்கு பதுங்கி இருந்த டேவிட் உள்பட 5 பேரையும் சைபர் கிரைம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் 44 செல்போன்கள், 7 வங்கி புத்தகம், 28 சிம் கார்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைதான 5 பேரையும் போலீசார் இன்று காலை கோவைக்கு அழைத்து வந்தனர். இங்கு வைத்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களிடம் தமிழகம் முழுவதும் எத்தனை பேரிடம் மோசடி செய்துள்ளீர்கள். எவ்வளவு லட்சம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறும் போது, கோவையில் கல்வி உதவி தொகை தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக 5 பேர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதேபோல் லாட்டரி மோசடி, ரிவார்டு பெற்று தருவதாக மோசடி, செல்போன் டவர் அமைக்க பணம் தருவதாக மோசடி என பல்வேறு வடிவங்களில் மோசடிகள் நடைபெற்று வருகிறது. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News