வாலிபரிடம் ரூ.5.4 லட்சம் மோசடி: இளம்பெண் மீது போலீசில் புகார்
- பின்னர் செல்போன் மூலம் இருவரும் பழக ஆரம்பித்தனர்.
- கார்த்திக் இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள தேவர்குட்டபள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் கார்த்திக் (வயது 26).
தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் கார்த்திக் திருமணத்துக்கு பெண் தேடிக்கொண்டிருந்தார். இந்நிலையில் மேட்ரிமோனியல் ஒன்றில் தன்னை பற்றிய தகவல்களை வெளியிட்டு பெண் தேவை என விண்ணப்பித்தார்.
இதேபோல மாப்பிள்ளை கேட்டு கர்த்திகாதேவி என்பவரும் விண்ணப்பித்து இருந்தார்.இதையடுத்து இருவரும் தகவல்களை பரிமாறிக்கொண்டனர்.
பின்னர் செல்போன் மூலம் இருவரும் பழக ஆரம்பித்தனர். கார்த்திக்கை திருமணம் செய்து கொள்ள ஆர்வத்துடன் இருப்பதாக கர்த்திகாதேவி தெரிவித்துள்ளார்.
இதை நம்பி கார்த்திக்கும் அவரை நினைத்து உருகியுள்ளார். இதனை பயன்படுத்திக்கொண்ட கர்த்திகாதேவி நகை வாங்க வேண்டும், புதிய செல்போன் வாங்க வேண்டும் என்று அவ்வப்போது ஏதேனும் காரணம் கூறி கார்த்திக்கிடம் இருந்து வெவ்வேறு வங்கி கணக்குகள் மூலம் மொத்தம் ரூ.5,40,000 பணத்தை பெற்றுள்ளார்.
இதன்பிறகு கார்த்திக்குடன் உள்ள தொடர்பை துண்டித்து கொண்டுள்ளார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த கார்த்திக் இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.