ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- பி.எஸ்.என்.எல். பொதுத்துறையில் முடக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும்.
- விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு மீதமுள்ள 8 சதவீத கருணைத் தொகை வழங்க வேண்டும்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் மாற்றக்கோரி அகில இந்திய பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் நலச்சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்களுக்கு 2017-ம் ஆண்டு ஜனவரி முதல் வழங்க வேண்டிய 15 சதவீத உயர்வுடன் கூடிய ஓய்வூதிய மாற்றத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பி.எஸ்.என்.எல். பொதுத்துறையில் முடக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு 2018-ம் ஆண்டிலிருந்து அளிக்கப்பட வேண்டிய மருத்துவப்படிகளை வழங்க வேண்டும். விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு மீதமுள்ள 8 சதவீத கருணைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
இதற்கு மாவட்டத் தலைவர் முனியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்ரமணியம் விளக்கவுரை ஆற்றினார். மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன் கோரிக்கை குறித்து பேசினார். இணைச் செயலாளர் மாது நன்றி கூறினார்.