ராணிப்பேட்டை நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத் தலைமையில் நடந்த போது எடுத்த படம்.
ராணிப்பேட்டை பஜார் வீதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க வேண்டும்
- கவுன்சிலர் கூட்டத்தில் வலியுறுத்தல்
- 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை நகர மன்ற சாதாரண கூட்டம் நகராட்சி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத் தலைமை தாங்கினார்.துணை தலைவர் ரமேஷ் கர்ணா, ஆணையாளர் ஏகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் 19-வது வார்டு காரை புதுத்தெருவில் சிறுபாலம் மற்றும் மழைநீர் வடிகால்வாய் அமைத்திடும் பணிக்கு ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் செலவிடுவது, வார்டு 6,பாட்டை தெரு, பாறை தெரு மற்றும் புது தெருவில் மழை நீர் வடிகால்வாய் பழுதுபார்த்தல் பணி செய்ய ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் செலவிடுவது, தகுதியான சாலையோர வியாபாரிகளின் சமூக பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்திட நடப்பாண்டில் புதிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டு அவர்கள் எவ்வித சிரமமும் இன்றி வியாபாரம் செய்வதற்கு ஏற்ற சூழல் உருவாக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் அறிவிப்பின்படி ராணிப்பேட்டை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உத்தேசமாக 400 வரை உள்ள சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் குடும்ப உறுப்பினர்களின் நிலையை மேம்படுத்த புதியதாக கணக்கெடுப்பு செய்து அவர்களுக்குரிய புள்ளி விவரங்களுடன் அடையாள அட்டை, விற்பனை செய்வதற்கான சான்றிதழ், விற்பனை திட்டத்தை தயாரித்தல் என்பன உள்பட 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் பேசியதாவது: கிருஷ்ணன்:- பஜார் வீதியில் பெரிய வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது எனவே அப்பகுதியில் இரு சக்கர வாகனம் மட்டும் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
ஜோதி சேதுராமன்: ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் பொதுமக்கள் இளைஞர்கள் குழந்தைகள் மாலை நேரத்தில் நடை பயிற்சி மற்றும் விளையாடுகின்றனர் எனவே மைதானத்தை சுற்றி மின்விளக்கு அமைக்க வேண்டும்.
வினோத்: ராணிப்பேட்டை வார சந்தை மைதானத்தில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் தினசரி மார்க்கெட் கொண்டு வந்த அமைச்சர் காந்திக்கு நன்றி தெரிவித்தார்.
குமார்: ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் காரிய மேடை அருகே தினசரி தூய்மை பணி நடத்த வேண்டும், ராணிப்பேட்டை நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் தெருக்களில் உள்ள நாய்கள், பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்துல்லா: நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் நகராட்சி அனுமதி பெறாமல் மாறுதல்கள் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
இதற்கு பதில் அளித்த நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.