குழந்தைகள் இல்லத்தில் இருந்து தப்பிய 4 சிறுவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்
- தேர்வு முடிந்து மாலை மாணவர்கள் அனைவரும் தங்கும் இடத்திற்கு சென்றனர்.
- ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ்நிறுத்தம், ெரயில் நிலையம் போன்ற பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை,காரை கூட்ரோடு பகுதியில் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் இயங்கி வருகிறது.
இந்த இல்லத்தில் உள்ள பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ளது. மேலும் 9, 10, 11, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வெளியில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து இல்லத்தில் தங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் 10, 11,12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிந்து 15 பேர் வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.
1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 47 பேர் உள்ளனர். தற்போது 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு தேர்வு நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் தேர்வு முடிந்து மாலை மாணவர்கள் அனைவரும் தங்கும் இடத்திற்கு சென்றனர்.
மாலை ராணிப்பேட்டை பகுதியில் லேசான மழை தூரல் வர தொடங்கியது. அப்போது இல்லத்தில் இருந்த சூர்யா என்கிற காட்டுராஜா (வயது10), பூபதி (12), சூர்யா (13), தினேஷ் (10) ஆகிய 4 மாணவர்கள் தாங்கள் வெளியில் காய்ந்திருக்கும் துணிகளை எடுத்து வருகிறோம் என கூறி சென்ற மாணவர்கள் 4 பேரும் இல்லத்திற்குள் திரும்பி வரவில்லை.
இதில் சூர்யா(எ)காட்டுராஜா(10) மற்றும் சூர்யா(13) ஆகிய இருவரும் அண்ணன், தம்பி ஆவார். இந்த நிலையில் காணாமல் போன மாணவர்களை இல்லத்தின் ஊழியர்கள் ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ்நிறுத்தம், ெரயில் நிலையம் போன்ற பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இச்சம்பவம் குறித்து சிறுவர்களுக்கான குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் (பொறுப்பு) கண்ணன்ராதா நேற்று ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
மேலும் அரசினர் இல்லத்திலிருந்து தப்பி ஓடிய மாணவர்களை ஆற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி தலைமையிலான போலீசார் தேடி வருகின்றனர்.