அரக்கோணம் நகராட்சியில் அதிகாரிகள் பணிகளை செய்யாததால் அவப்பெயர்
- தி.மு.க. கவுன்சிலர் குற்றச்சாட்டு
- 26 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகர மன்ற சாதாரண கூட்டம் நடந்தது. நகரமன்ற தலைவர் லட்சுமி தலைமை தாங்கினார்.
நகரமன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர் துரை.சீனிவாசன் பேசுகையில்:-
தி.மு.க. ஆட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செய்யப்பட்டு வருகிறது. தேவையான நிதிகளை மாநில அரசு ஒதுக்கி வருகிறது. ஆனால், அதிகாரிகளின் சரியான செயல்பாடு இல்லாததால் வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை.
இதனால் தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. சாலை போடும்போதும், கழிவுநீர் கால்வாய் கட்டும் போதும் அங்கு மின்கம்பங்கள், குடிநீர் பம்பு போன்றவைகளை சேர்த்து சாலைகள் போட்டு, கழிவுநீர் கால்வாய் கட்டி விடுகின்றனர்.
இதனை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. 25-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் இன்னும் சாலை போடவில்லை. குடிநீர் வசதி ஏற்படுத்தவில்லை.
விரைந்து பணிகளை தொடங்கவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி நகராட்சி அலுவலகத்திற்கு வர வேண்டி இருக்கும் என்றார்.
கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் சரிவர வருவதில்லை எனவும் வீடுகளின் குப்பைகளை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சரிவர சேகரிப்பதில்லை என கூறினர்கள்.
கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.