வேன் மரத்தில் மோதி நின்ற காட்சி.
ஷூ கம்பெனி வேன் விபத்தில் 9 பேர் படுகாயம்
- டிரைவரின் கட்டுபாட்டை இழந்து மரத்தில் மோதியது
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வி.சி.மோட்டூரில் ஷூ கம்பெனி இயங்கி வருகிறது. இந்த ஷூ கம்பெனியில் கலவை அருகே உள்ள பாலி, ராந்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆண்கள், பெண்கள் வேலை செய்து வருகின்றனர்.
வேலை செய்யும் தொழிலாளர்களை ஷூ கம்பெனி வேன் மூலம் தினமும் கம்பெனிக்கு அழைத்து வருவது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை ஆற்காடு பஜனை கோவில் தெருவை சேர்ந்த சூர்யா (வயது 22) என்பவர் கம்பெனிக்கு சொந்தமான வேனில் 12 பெண்கள் மற்றும் 3 ஆண்களை ஏற்றிக் கொண்டு ஆற்காடு நோக்கி வந்து கொண்டு இருந்தார்.
வேன் முள்ளுவாடி கூட்ரோடு அருகே வந்தபோது எதிரே வந்த லாரிக்கு வழி விடுவதற்காக டிரைவர் வேனை இடது பக்கம் திருப்பினார். அப்போது எதிர்பாராத விதமாக வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனில் வந்த ஷூ கம்பெனி பெண் தொழிலாளர்கள் கீதா, சிவகுமாரி, சாந்தி, வெண்ணிலா, நந்தினி, கவிதா வேன் டிரைவர் சூர்யா, லோகேஸ்வரன், சிவலிங்கம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து கலவை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.