கோப்புபடம்
ஆற்காட்டில் அடகு வியாபாரியிடம் 13 பவுன் நகை, பணம் பறிப்பு
- மர்ம நபர்கள் 2 பேர் பைக்கில் வந்து துணிகரம்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ஆற்காடு ஜீவானந்தம் சாலையை சேர்ந்தவர் நரேஷ் குமார் (வயது 45). இவர் பொன்னையில் நகை அடகு கடை வைத்துள்ளார்.இவரது தம்பி ராணிப்பேட்டையில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு நரேஷ்குமார் ராணிப்பேட்டையில் உள்ள அவரது தம்பி கடைக்கு சென்றார். அங்கிருந்து 13 பவுன் தங்க நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார். ஜீவானந்தம் சாலையில் வீட்டின் அருகே வந்து தனது பைக்கை நிறுத்தினார்.
அவரை பின் தொடர்ந்து மர்ம நபர்கள் 2 பேர் பைக்கில் வந்தனர்.
ஆள் நடமாட்டம் இல்லாததை பயன்படுத்தி கொண்ட அவர்கள் நரேஷ் குமார் வைத்திருந்த நகை பையை பறித்துக் கொண்டு வேலூர் நோக்கி தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து நரேஷ் குமார் ஆற்காடு டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.