உள்ளூர் செய்திகள்

அமைச்சர் காந்தி மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கிய காட்சி.

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 லட்சம் நலத்திட்ட உதவி

Published On 2023-04-25 13:06 IST   |   Update On 2023-04-25 13:06:00 IST
  • அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
  • ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டஅரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளி களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் மற்றும் செயற்கை கைகள் என மொத்தம் ரூ.10 லட்சத்து 72 ஆயிரத்து 350 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் 17 மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். இதில் சக்கர நாற்காலி, காதொலி கருவி, ஊன்றுகோல் வேண்டி மனு அளித்தவர்களுக்கு உடனடியாக சக்கர நாற்காலி, காதொலி கருவி, ஊன்றுகோல் ஆகியவற்றையும் அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் உள்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

பின்னர் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்தும் பல்வேறு மனுக்களை பெற்று கொண்டனர்.

மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பணியின் போது உயிரிழந்த வருவாய்த்துறையைச் சேர்ந்த 5 கிராம நிர்வாக அலுவலர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலராக பணி புரிவதற்கான பணி நியமன ஆணைகளையும், தாட்கோ மூலம் 5 தூய்மை பணியாளர்களுக்கு தூய்மை பணியாளர் நல வாரிய அட்டைகளையும் அமைச்சர் காந்தி வழங்கினார்.

Tags:    

Similar News