திருக்குறளை தமிழி எழுத்தில் எழுதி அசத்திய திருப்புல்லாணி மாணவர்கள்
- திருக்குறளை தமிழி எழுத்தில் எழுதி திருப்புல்லாணி மாணவர்கள் அசத்தினார்கள்.
- தலைமையாசிரியர் புரூணா ரத்னகுமாரி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பில் தமிழி எழுத்து பயிற்சியும், திருக்குறளை தமிழி எழுத்தில் எழுதும் போட்டியும் நடைபெற்றது.
6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களில் ஆர்வமுள்ள 20 பேருக்கு, சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் பயன்பாட்டில் இருந்த தமிழி கல்வெட்டு எழுத்துகளை எழுதவும், வாசிக்கவும் பயிற்சி தரப்பட்டது. பயிற்சியை மன்றச் செயலரும் தொல்லியல் ஆய்வாளருமான வே.ராஜகுரு நடத்தினார்.
பயிற்சிக்குப் பின் தமிழி எழுத்துகளில் திருக்குறளை எழுதும் போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பாக எழுதிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ம.திவாகரன், சு.ஸ்ரீவிபின் மு.சந்தோஷ், ரா.ஜனனிஸ்ரீ, மு.ரித்திகாஸ்ரீ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பள்ளித் தலைமையாசிரியர் புரூணா ரத்னகுமாரி பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.