உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார். அருகில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், நவாஸ்கனி எம்.பி., முருகேசன் எம்.எல்.ஏ. உள்ளனர்.

வீரன் அழகுமுத்துக்கோன் சிலை வைக்கப்படும்: அமைச்சர் தகவல்

Published On 2022-09-18 07:58 GMT   |   Update On 2022-09-18 07:58 GMT
  • முதுகுளத்தூரில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலை வைக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
  • முதுகுளத்தூர் தொகுதி 3.5 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட பெரிய தொகுதியாகும்.

முதுகுளத்தூர்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள செல்வநாயகபுரம் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். நவாஸ்கனி எம்.பி. முன்னிலை வகித்தார்.மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி வரவேற்றார்.

பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு விலையி ல்லா சைக்கிள்களை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கி பேசியதாவது:-

முதுகுளத்தூர் தொகுதி ஒரு காலத்தில் புறக்கணிக்கப்பட்ட தொகுதியாக இருந்தது. இப்போது முன்னேறிய பகுதியாக மாறியுள்ளது. எங்கு பார்த்தாலும் பணிகள் நடைபெறுகின்றன.

முதுகுளத்தூர்-கடலாடி செல்லும் சாலை குறுகலாக உள்ளதால் ரூ.21 கோடி செலவில் பைபாஸ் சாலையும், உடைய நாதபுரம் அருகில் பைபாஸ் சாலையும் அமைய உள்ளன. முதுகுளத்தூரில் தேவர் சமூகத்திற்கு ஒரு மகால், செல்லூரில் இம்மானுவேல் சேகரனுக்கு சிலை அமைக்கப்படும்.

கன்னிராஜபுரம் கிராமத்தில் காமராஜருக்கு சிலையும், ராமசாமிபட்டி கிராமத்தில் கட்ட பொம்மனுக்கு சிலையும் அமைக்கப்படும். முதுகுளத்தூர் பகுதியில் சமூக பிரச்சினை ஏற்பட வாய்ப்பே இல்லை. எல்லோரும் இணைந்தே பணியாற்றுகிறார்கள்.

குடிநீர் குழாயில் தண்ணீர் வருவதில்லை என்று கிராம மக்கள் கூறினர். மேலும் செல்வநாயகபுரம் கிராமத்தில் உள்ள பிற்பட்டோர் நல விடுதியில் சாப்பாடு நல்லவிதமாக போடுவதில்லை என்றும் புகார் வந்துள்ளது. இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுப்பார்.

முதுகுளத்தூர் தொடுதியில் கூடுதலாக 40 பஸ்கள் விடப்பட்டன. அதில் சில பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதுவும் விரைவில் விடப்படும். முதுகுளத்தூர் தொகுதி 3.5 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட பெரிய தொகுதியாகும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றியது. அதே போல வர உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் தி.மு.க.வை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், பேரூராட்சி சேர்மன் ஷாஜகான், கவுன்சிலர் மோகன்தாஸ், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், பூபதி மணி, செல்வநாயகபுரம் கருணாநிதி, உலகநாதன். வாகைக்குளம் அர்ச்சுனன், சேகர், செல்வநாயகபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பால்சாமி, சாம்பக்குளம் ராஜாத்தி கருணாநிதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News