ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா கொடியிறக்க நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பக்தர்களுக்கு நள்ளிரவு வரை நெய்சோறு விநியோகம்
- ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா நிறைவு பெற்றது.
- இதையொட்டி பக்தர்களுக்கு நள்ளிரவு வரை நெய்சோறு விநியோகிக்கப்பட்டது.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி குத்புல் அக்தாப் செய்யது இபுராஹீம் பாதுஷா நாயகத்தின் 848-வது ஆண்டு சந்தனக்கூடு திருவிழா கடந்த மாதம் 1-ந்தேதி மவ்லீது ஷரீப்புடன் தொடங்கியது.
இதன் நிறைவு விழா நிகழ்ச்சியாக நேற்று (30-ந்தேதி) மாலை தர்கா வளாகத்தில் கொடியிறக்கம் நடந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு பின் கொடியிறக்கம் நடைபெற்றதால் பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. இந்த விழாவில் தென் மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொடியிறக்கத்தை முன்னிட்டு மாலையில் தர்கா மண்டபத்தில் பாதுஷா நாயகத்தின் புகழ்மாலை ஓதப்பட்டு உலக மக்களின் நல்லிணக்கத்திற்காக மாவட்ட அரசு காஜி சலாஹூதீன் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
தக்பீர் முழக்கத்துடன் தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் பாக்கிர் சுல்தான், செயலாளர் சிராஜுதீன், உப தலைவர் சாதிக் பாட்ஷா மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், தர்கா ஹக்தார்க ள்கொடியிறக்கினர். இறக்கப்பட்ட கொடியை ஹக்தார்கள் மகான் அடக்க ஸ்தலத்திற்கு கொண்டு சென்றனர்.
இதை தொடர்ந்து கொடிமரத்தில் உள்ள காவட்டம் கழற்றப்பட்டு பாதுஷா நாயகம் சன்னதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
தொடர்ந்து அனைத்து சமுதாய மக்களும் இணைந்து கொடிமரத்தை இறக்கினர்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நள்ளிரவு வரை நின்று பாதுஷா நாயகத்தின் பிரசாதம் (நெய்சோறு) பெற்றுச்சென்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் பாக்கிர் சுல்தான், செயலாளர் சிராஜுதீன், உப தலைவர் சாதிக் பாட்ஷா மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், தர்கா ஹக்தார்கள் செய்தனர்.