உள்ளூர் செய்திகள்

தீக்குளிக்க முயன்ற இளம்பெண் மீது வழக்கு

Published On 2022-11-22 08:44 GMT   |   Update On 2022-11-22 08:44 GMT
  • ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
  • இதனை கண்ட தீயணைப்பு வீரர்கள் அவரை தடுத்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பரளை பகுதியை சேர்ந்தவர் லட்சுமி(வயது 26). இவர் நேற்று தனது கைக்குழந்தையுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தார். அவர் தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்வதாகவும், திருமணத்தின் போது பெற்றோர்கள் கொடுத்த 10 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை தர மறுக்கிறார் என்றும், அவரிடம் இருந்து தனது நகை மற்றும் பணத்தை மீட்டுத் தருமாறு கலெக்டரிடம் மனு அளித்துவிட்டு வெளியே வந்தார்.

பின்னர் லட்சுமி திடீரென்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் தன் மீதும் தன் குழந்தை மதிவர்ஷிதா மீதும் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட தீயணைப்பு வீரர்கள் அவரை தடுத்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். போலீசார் பேரிகாட் அமைத்து நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போதிலும் போலீசாருக்கு 'டிமிக்கி' கொடுத்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மனு கொடுக்க வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் கையில் வைத்திருந்த மண்எண்ணை கேனை தன் மீதும் குழந்தை மீதும் தனக்குத்தானே ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக கேணிக்கரை சப்-இன்ஸ்பெக்டர் கார்மேகம் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News