உள்ளூர் செய்திகள்

கோவை வந்தடைந்தார் ராகுல் காந்தி: சாலை வழியாக உதகை பயணம்

Published On 2023-08-12 06:57 IST   |   Update On 2023-08-12 10:29:00 IST
  • வயநாடு செல்லும் வழியில் தமிழகம் வருகை
  • முன்னாள் விண்வெளி வீரர் மற்றும் பழங்குடியின மக்களை சந்திக்கிறார்

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். இதற்கிடையே ராகுல்காந்தி, மோடி குடும்ப பெயர் பற்றி தவறாக பேசியதாக கூறி குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். குஜராத் நீதிமன்றம் தண்டனையை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தது.

அதனை எதிர்த்து, ராகுல்காந்தி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. மேலும், அவர் தொடர்ந்து எம்.பி.யாக நீடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ராகுல்காந்தி மீண்டும் வயநாடு தொகுதி எம்.பி.யாக பொறுப்பேற்று பாராளுமன்றத்திற்கு சென்று பேசினார். இந்தநிலையில் 4 மாதங்களுக்கு பிறகு ராகுல்காந்தி தனது தொகுதியான வயநாட்டிற்கு இன்று செல்கிறார். கோவை, நீலகிரி வழியாக வயநாடு செல்லும் வகையில் ராகுல்காந்தியின் சுற்றுப்பயண திட்டங்கள் வகுக்கப்பட்டன.

இதற்காக ராகுல்காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் காலை 9 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு வந்தார். ராகுல்காந்தியை வரவேற்பதற்காக கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகளும் கோவை விமான நிலையத்தில் குவிந்தனர்.

ராகுல்காந்தி விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்ததும், காங்கிரஸ் நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் ராகுல், ராகுல் என உற்சாகமாக கோஷங்களும் எழுப்பி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

எம்.பி.யாக பதவியேற்று முதல் முறையாக கோவைக்கு வந்ததால் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

பின்னர் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட ராகுல்காந்தி விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக கோவில்பாளையம், அன்னூர், மேட்டுப்பாளையம், கோத்தகிரி வழியாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு புறப்பட்டார்.

Tags:    

Similar News