தரமான பொருட்கள் விற்பனை செய்வது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு தரமான பொருட்கள் விற்பனை செய்ய வேண்டும்
- யூகலிப்ட்ஸ் தைலம் ஆகியவை இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக வாங்கிச் செல்லும் பொருட்களாகும். இவற்றில் ஒரு சில பொருட்களில் கலப்படம் உள்ளதாக சுற்றுலா பயணிகள் குற்றம்சாட்டினர்.
- கலப்படங்களை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து தெளிவாக எடுத்துரைத்தனர்.மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் குட்கா போன்ற வகைகளை விற்பனை செய்யக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளி நாடுகளைச்சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகமாக கண்டு ரசிக்கும் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது. கொடைக்கானலில் தயாராகும் ஹோம் மேட் சாக்லேட் வகைகள், ஸ்பைசஸ், டீ தூள் வகைகள் மற்றும் யூகலிப்ட்ஸ் தைலம் ஆகியவை இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக வாங்கிச் செல்லும் பொருட்களாகும். இவற்றில் ஒரு சில பொருட்களில் கலப்படம் உள்ளதாக சுற்றுலா பயணிகள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து திடீர் சோதனை செய்யப்பட்டு தரம் குறைந்த பொருட்கள் வைத்திருப்பவர்களின் மீது உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்தனர். தரம் குறைந்த மற்றும் போலியான பொருட்களை விற்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் உணவு பாதுகாப்பு பயிற்சி, லைசன்ஸ் மேளா, எளிமையாக கலப்படப் பொருட்களை கண்டறியும் முறை ஆகிய முப்பெரும் விழிப்புணர்வு நிகழ்வினை கொடைக்கானல் வியாபாரிகளுக்கு எடுத்துரைக்கும் வகையில் தனியார் அரங்கில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில் கொடைக்கானல் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் லாரன்ஸ், உணவு தர நிர்ணய அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளர் முகமது சையது ஆகியோர் வியாபாரிகளுக்கு பயிற்சி அளித்தனர். மசாலா பொருட்கள், டீத்தூள், ஆயில்கள், வாசனை திரவியங்கள் ஆகியவற்றில் உள்ள கலப்படங்களை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து தெளிவாக எடுத்துரைத்தனர்.மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் குட்கா போன்ற வகைகளை விற்பனை செய்யக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி தரமான பொருட்களை மட்டுமே விற்க அறிவுறுத்தினர். அனைத்து வியாபாரிகளும் இந்த விழிப்புணர்வு முகாமில் தரமற்ற பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜா, வார்டு கவுன்சிலர் அப்பாஸ், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் பல்பொருள் அங்காடி உரிமையாளர் கலந்து கொண்டனர்.