நடுக்கடலில் பெண் கழுத்தறுத்துக் கொலை
- தேடப்பட்ட முக்கிய குற்றவாளி கேரளாவில் கைது
- தனிப்படை போலீசாரிடம் சிக்கினார்
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே காரக்கோட்டை கோழிசனம் பகுதியை சேர்ந்தவர் சுலோச்சனா (வயது 60). கணவரை இழந்து விதவையான இவர், வெளியூரில் மகள் வேலை பார்த்து வருகின்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2-ந்தேதி முதல் தாய் சுலோச்சனாவை கானவில்லை என மகள் மணமேல்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் காவல்த்துறையினர் தீவிரமாக தேடியதில் சுலோச்சனா மணமேல்குடி அலையாத்திக்காடு பகுதியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து காவல்த்துறையினர் விசாரணை நடத்தியதில் அதே ஊரை சேர்ந்த உறவினரான ரமேஷ் என்பவர் சுலோச்சனாவிற்கு தேவையான உதவிகள் மற்றும் பண உதவிகள் செய்து வந்துள்ளது தெரிந்தது. ஒரு கட்டத்தில் ரமேஷ் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கு சுலோச்சனாவால் பணத்தை திருப்பிக் கொடுக்கமுடியாத சூழ்நிலையில், சுலோச்சனாவை ஒரு இடத்திற்கு வரும்படி ரமேஷ் தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம் சோமநாதபட்டினம் கடற்கரை பகுதிக்கு சென்று அங்கே இருந்த நண்பர் செந்தில்குமாரை கூட்டிக்கொண்டு அங்கிருந்து படகு மூலம் கடலுக்குச் சென்றுள்ளனர். நடுக்கடல் பகுதிக்கு சென்றதும் ரமேஷ் தான் வைத்திருந்த கட்டையால் சுலோச்சனாவின் பின் தலையில் அடித்துள்ளார். இதில் சுலோச்சனா மயங்கி விழுந்ததும் கத்தியால் அவர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். மேலும் சுலோச்சனாவின் உடலை மணமேல்குடி அலையாத்திக்காடு புதர் பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.அதனை தொடர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நண்பரான செந்தில்குமாரை கைது செய்த காவல்த்துறையினர் தலைமறைவாக இருந்த ரமேசை, காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். சம்பவத்திற்கு பிறகு ரமேஷின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு கேரளா பாலக்காடு பகுதியிலிருந்து ரமேஷின் செல்போன் சிக்னல் கிடைத்துள்ளது.அதனடிப்படையில் கேரளா விரைந்த தனிப்படையினர், ஆதார் எண் அடிப்படையில் அங்கிருந்த லாட்ஜ்களில் தேடியதில், அங்கிருந்த ஒரு தனியார் லாட்ஜில் ரமேஷ் தலைமறைவாக இருந்தது தெரிய வந்துள்ளது. பின்னர் ரமேஷை கைது செய்த காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான தனிப்படையினர் மணமேல்குடி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணைக்கு பிறகு அறந்தாங்கி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.