இலுப்பூரில் அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு
- இலுப்பூரில் அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு நடைபெற்றுள்ளது
- பொதுமக்கள் அச்சம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே ஆடத்தடுத்த இரு வீடுகளில் புகுந்த கொள்ளையர்கள் நகை, பணத்தை திருடிச்சென்றனர். இலுப்பூர் அருகே இடையபட்டி ஊராட்சி காசியாபுரத்தை சேர்ந்தவர் கணேசன். விவசாயியான இவர், குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு அருகே நடந்த திருவிழாவிற்கு சென்றார்.
பின்னர் விழா முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்கமாக பூட்டிருந்த கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியானார். உள்ளே சென்று பார்த்த போது வீடு முழுவதும் பொருட்கள் சிதறிக்கிடந்தன. அறையில் இருந்த பீரோவின் கதவு உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் நகை திருடுபோயிருப்பது தெரியவந்தது.
இதே போல் இவர் வீட்டிற்கு அருகில் வசிப்பவர் மதி என்பவர் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்:- எங்கள் பகுதியில் தொடர்ந்து இது போன்ற திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்லவே அச்சமாக உள்ளது. எனவே பொது மக்களின் அச்சத்தை போக்கும் விதமாக போலீசார் நடவடிக்கை எடுத்து மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.