ஏ.டி.எம்.ல் பணம் எடுக்க வருவபவர்களுக்கு உதவுவது போல் நடித்து திருடியவர் கைது
- ஏ.டி.எம்.ல் பணம் எடுக்க வருவபவர்களுக்கு உதவுவது போல் நடித்து திருடியவர் கைது செய்யப்பட்டார்
- பல்வேறு வழக்குகளில் தொடர்பு அம்பலம்
பொன்னமராவதி,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வரும் பொதுமக்களிடம் உதவுவது போல நடித்து பணம் எடுத்து தருவதாக கூறி அவர்களிடமிருந்த ஏ.டி.எம். கார்டையும். ரகசிய எண்ணையும் கேட்டு தெரிந்து கொண்டு வாலிபர் ஒருவர் தொடர்ந்து மோசடி செயலில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அந்த மர்ம நபரை பிடிக்க புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே தலைமையில் உத்தரவின்பேரில் பொன்னமராவதி டி.எஸ்.பி. அப்துல் ரகுமான் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், ஆனந்த் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. பொன்னமராவதியில் பணம் எடுக்க வருபவர்களிடம் குறிப்பாக சந்தை நாட்களானன சனி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அதிகம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் குறிப்பிட்ட அந்த எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையத்தை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று பொன்னமராவதி அருகே சுந்தரசோழபுரத்தை சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவர் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்து இளைஞர் ஒருவர் அவரது ஏ.டி.எம். கார்டை பெற்று பணம் எடுப்பது போல் நடித்து தான் வைத்திருந்த போலி ஏ.டி.எம். கார்டை பாக்யலெட்சுமியிடம் கொடுத்துள்ளார்.
இதற்கிடையே அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.30 ஆயிரத்து 500 பணம் எடுத்து உள்ளதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வரவே உடனடியாக அவர் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக பொன்னமராவதி போலீசார் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அலசி ஆராய்ந்ததில் பாக்கியலட்சுமி மர்ம நபரை அடையாளம் காட்டியுள்ளார். அதில் இளைஞர் ஒருவர் ஏடிஎம் கார்டை மாற்றியதும் பிறகு அந்த கார்டை பயன்படுத்தி பணம் எடுததும் தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு அந்த மர்ம நபரை தனிப்படை போலீசார் மாறு வேடத்தில் அங்கும் இங்குமாக நின்று கொண்டு மீண்டும் அதே போன்று வேறு நபரிடம் மோசடியில் ஈடுபட முயன்றபோது கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததில் அவர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா பாலமேடு பகுதியை சேர்ந்த வெங்கடசாமி என்பவரின் மகன் சரவணகுமார் (31) என்பது தெரியவந்தது.
திருட்டில் ஈடுபட்டு வந்த சரவணகுமாரிடம் பல்வேறு கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்ட போலீசார் ஏற்கனவே மதுரை பகுதியில் ஏ.டி.எம். மையங்களில் இதே போன்று திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக ஆறு வழக்குகள் இருப்பதை உறுதி செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.18000 ரூபாய் ரொக்க பணத்தையும் கைப்பற்றிய போலீசார் பின்னர் பொன்னமராவதி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.