உள்ளூர் செய்திகள்

அறந்தாங்கி அருகே 800 ஆண்டு பழமையான சிதிலமடைந்த சிவன் கோவிலில் சிவலிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு

Published On 2023-06-27 12:53 IST   |   Update On 2023-06-27 12:53:00 IST
  • அறந்தாங்கி அருகே 800 ஆண்டு பழமையான சிதிலமடைந்த சிவன் கோவிலில் சிவலிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது
  • பிரதிஷ்டை செய்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர்

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோனேரியேந்தல் கிராமத்தில் சுமார் 800 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சிவாலயம் ஒன்று இருந்து வந்துள்ளது. அது காலப்போக்கில் இயற்கை சீற்றத்தினாலும், அன்னியர்கள் படையெடுப்பினாலும் சிதையுண்டு, சாமி சிலைகள் ஆங்காங்கே சிதறி மண்ணுக்குள் புதைந்துள்ளது. இதனால் கோவில் பல ஆண்டுகளாக வழிபாடற்று கிடந்தது. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த கிராமமக்கள் கருவேல மரங்களை சுத்தம் செய்வதற்காக காட்டிற்குள் சென்றுள்ளனர்.

அப்போது அங்கே சிவாலயம் இருந்ததற்கு அடையாளமாக சிவலிங்கம் உள்ளிட்ட கற்சிலைகள் ஆங்காங்கே மண்ணில் புதைந்து கானப்பட்டுள்ளது. இதுபற்றிய தகவல் அறிந்த கோவை அரண் பணி அறக்கட்டளையைச் சேர்ந்த சிவனடியார்கள், கோனேரியேந்தல் கிராமத்திற்கு வந்தனர். பின்னர் அங்கே சிதையுண்டும், மண்ணில் புதைந்தும் கானப்பட்ட சிவலிங்கம், ஆவுடை, நந்தீஸ்வரர் உள்ளிட்ட சிலைகளை மீட்டனர்.

மேலும் மிகவும் அரிதான 8 கைகளை உடைய போர் தெய்வமான நிசும்பசூதினி எனும் காளிதேவி சிலையையும் கண்டெடுத்துள்ளனர். கண்டெடுக்கப்பட்ட சிலைகளை பச்சரிமாவு உள்ளிட்ட அபிஷேக பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்து மூன்றரை அடி உயர லிங்கத்தை ஆவுடையில் பொருத்தி அமர்த்தினர். அதே போன்று மற்ற சிலைகளையும் பீடத்தில் அமர்த்தினர். பின்பு தேவார பதிகங்களை தமிழ் முறைப்படி பாராயணம் செய்து, லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது கிராம மக்கள் தெரிவிக்கையில் மிகவும் பழமையான சிவலிங்கத்தை கண்டெடுத்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதற்கு கோவை அரண் பணி அறக்கட்டளையினர் முழுக்க முழுக்க உதவி செய்துள்ளனர். மேலும் கோவிலுக்கான தற்காலிக பந்தல் அமைத்து தரவும் உள்ளனர். எனவே தமிழக அரசு தலையிட்டு, இயற்கை சீற்றத்தாலும், அன்னியர்கள் படையெடுப்பினாலும் சிதைந்து போன கோவிலுக்கு கருவறை மற்றும் அர்த்தமண்டபம் கண்டித்தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News