உள்ளூர் செய்திகள்

மாணவர்களின் நலன் கருதி நெம்மேலிவயல் பகுதியில் தரைப்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2023-01-11 12:32 IST   |   Update On 2023-01-11 12:32:00 IST
  • மாணவர்களின் நலன் கருதி நெம்மேலிவயல் பகுதியில் தரைப்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்
  • மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்தால் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து விடுகின்றனர் என பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா நெம்மேலிவயல் பகுதியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு அதே பகுதியின் அருகே உள்ள கொள்ளுத்திடல் கிராமத்திலிருந்து 15 ற்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கொள்ளுத்திடலிலிருந்து கிருஷ்ணாஜிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக நெம்மேலிவயல் பள்ளியை அடைவதற்கு 4 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க வேண்டியதாலும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக பிள்ளைகளை அனுப்ப அச்சம் உள்ளதாலும், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை 1 கிலோ மீட்டர் தூரம் உள்ள கண்மாய்கரை மற்றும் வயல்காடு வழியாக பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர்.

அவ்வாறு செல்லுகின்ற பாதையின் குறுக்கே ஆறு செல்லுவதால், அந்த ஆற்றின் குறுக்கே தற்காலிகமாக பலகையின் மூலம் பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்தால் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து விடுகின்றனர் என பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு பள்ளிச் சிறுவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் அடுத்த மழைக்காலம் வருவதற்குள் குறுக்கு பாலம் மற்றும் கண்மாய்கரை வழியாக தார்ச்சாலை அமைத்து தர அப்பகுதி பெற்றோர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




Tags:    

Similar News