உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை வாலிபரை கைது செய்த உ.பி. புலனாய்வு படை

Published On 2022-06-08 14:15 IST   |   Update On 2022-06-08 14:15:00 IST
  • உ.பி.புலனாய்வு படையினர் புதுக்கோட்டை வாலிபரை கைது செய்தனர்.
  • வெடி குண்டு மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டார்.

புதுக்கோட்டை:

உத்திரபிரதேசத்தின் சுல்தான்பூர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுபவர் நீல்காந்த் மணி புஜாரி. இவர், தலைநகரான லக்னோவில் வசிக்கிறார். மேலும் அலிகன்ச் பகுதியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தின் தீவிர தொண்டராக உள்ளார்.

இந்நிலையில் நீல்காந்தின் கைப்பேசி எண் வாட்ஸ்-அப்பிற்கு அறிமுகமற்ற ஒருவரிடம் இருந்து ஒரு குழும இணைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதில் சேரும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. நீல்காந்த் இதனை ஏற்று குழுமத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில் அதில் இந்தி, ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் வந்த மிரட்டல் செய்தியை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உ.பி.யில் லக்னோ மற்றும் உன்னாவ் நகரிலும் கர்நாடகாவில் 4 இடங்களிலும் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகங்களை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக அதில் கூறப்பட்டிருந்தது. இது குறித்து லக்னோவின் மடிேயான் காவல் நிலையத்தில் நீல்காந்த் புகார் அளித்தார்.

போலீசார் இப்புகாரை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த வாட்ஸ் அப் தகவல் தமிழகத்தில் இருந்து வந்ததை கண்டறிந்தனர். மேலும் இதை அனுப்பியவர் புதுக்கோட்டையின் திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்த அன்சார் அலி என்பவரின் மகன் ராஜ்முகம்மது (வயது 22) என கண்டறிந்தனர்.

இந்த தகவலை தமிழக போலீசாருக்கு உ.பி. போலீசார் தெரியப்படுத்தினர். இதையடுத்து திருக்கோகர்ணத்தில் ராஜ் முகம்மதுவை பிடித்து தமிழக போலீசார் விசாரித்துள்ளனர்.

இதில் அந்த தகவலை தாம் அனுப்பியதாக அவர் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து உ.பி.யின் எஸ்ஐடி எனும் சிறப்பு புலனாய்வு படையின் ஒரு குழுவினர் லக்னோவில் இருந்து விமானத்தில் சென்னை வந்தனர். இவர்கள் தமிழக போலீசார் உதவியுடன் ராஜ் முகம்மதுவிடம் விசாரித்தனர். பிறகு அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News