உள்ளூர் செய்திகள்

ஆந்திராவில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்த விநாயகர் சிலைகள்

Published On 2023-09-11 11:42 IST   |   Update On 2023-09-11 11:42:00 IST
  • ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் புதுக்கோட்டைக்கு விற்பனைக்காக விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன
  • மரக்கூழ், மரவள்ளிக்கிழங்கினால் செய்யப்பட்டது என்பதால் சுற்றுசூழல் மாசு ஏற்படாது

புதுக்கோட்டை 

விநாயகப் பெருமானின் அவதார தினத்தை நாம் விநாயகர் சதுர்த்தியாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயகப் பெருமான் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. விநாயகர் சதுர்த்தி நாளில் வீடுகளில் பல வண்ணங்களில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்கி வந்து பிரதிஷ்டை செய்து, விநாயகருக்கு விருப்பமான அருகம்புல், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, கடலை, பழங்கள் படைத்து வழிபடுவார்கள். விநாயகர் பூஜை முடிந்ததும் 3,5,7 அல்லது 10 வது நாளில் வீடுகளில் வைத்து வழிபடப்பட்ட விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து பூஜை செய்து, ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.

வழக்கமாக விநாயகர் சதுர்த்தியானது ஆவணி மாதத்தில் தான் வரும். ஆனால் இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் வருகிறது. பெருமாளுக்குரிய புரட்டாசி மாதம் துவங்கும் நாளிலேயே, முழு முதற்கடவுளான விநாயகருக்கு உரிய விநாயகர் சதுர்த்தியும் இணைந்து வருவதால் இது கூடுதல் சிறப்பு வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி 18ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் தொழிலாளிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போதே விநாயகர் சிலை விற்பனை தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டையில் ஆங்காங்கு விநாயகர் சிலை விற்பனை நடைபெற்று வருகிறது.

இதற்காக ஆந்திரா, ராஜஸ்தான், கொல்கொத்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து அரை அடி முதல் 10 அடி உயரம் வரையிலான பல வண்ண சிலைகள் புதுக்கோட்டைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது. குறிப்பாக ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் வண்ண வண்ண விநாயகர் சிலைகள் புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலமாக புதுக்கோட்டை திலகர் திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விநாயகர் சிலைகள் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் பேப்பர் கூல், மரவள்ளி கிழங்கு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது. இதனால் நீர் நிலைகள் மாசு படாமல் பாதுகாக்கப்படும். இந்த சிலைகள் அனைத்தும் 50 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனைக்காக காட்சி படுத்தப்பட்டு உள்ளன.

இந்து முன்னணி சார்பில் ஆந்திராவில் இருந்து 67 விநாயகர் சிலைகள் வருவிக்கப்பட்டு உள்ளது. இதில் 48 விநாயகர் சிலைகள் புதுக்கோட்டை நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி நெருங்கி வருவதை தொடர்ந்து தற்போதே விநாயகர் சிலை விற்பனையானது புதுக்கோட்டையில் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.  

Tags:    

Similar News