இலுப்பூரில் புதிதாக திறக்கப்பட்ட மகளிர் போலீஸ் நிலையத்தை டாக்டர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்
- மகளிர் போலீஸ் நிலையத்தை கடந்த 6-ந்தேதி காணொலி காட்சி மூலம் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.
- முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டு போலீசாருக்கு இனிப்புகளை வழங்கினார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் காரையூர் உள்ளிட்ட 4 போலீஸ் நிலையம் இலுப்பூர் சப்-டிவிசன்களுக்கு உட்பட்டது. இந்தநிலையில் இப்பகுதி பெண்கள் தங்களது பிரச்சினை குறித்து மகளிர் காவல் நிலையம் செல்ல வேண்டுமானால் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் செல்லும் நிலை இருப்பாக கூறிவந்தனர். எனவே இந்த இலுப்பூரிலேயே அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து அப்போது அமைச்சராக இருந்த டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. நடவடிக்கை மேற்கொண்டார்.
இதையடுத்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை கடந்த 6-ந்தேதி காணொலி காட்சி மூலம் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார். இதனைதொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டு போலீசாருக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் இலுப்பூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் குருபாபு, நகர செயலாளர் மணிகன்டன், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.