உள்ளூர் செய்திகள்

முதல்வர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம்

Published On 2022-06-06 15:11 IST   |   Update On 2022-06-06 15:11:00 IST
  • முதல்வர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
  • அரசு விழாவில் பங்கேற்க வருகிறார்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் வரும் 8-ந் தேதி நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிறார். இதையடுத்து, பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கலெக்டர் கவிதா ராமு, திருச்சி சரக டிஐஜி, புதுக்கோட்டை எஸ்.பி. மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தில் அமைச்சர் ரகுபதி பேசும் போது, வரும் 8-ந் தேதி அன்று நடைபெறும் விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கோடிக்கணக்கான மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் கொண்டுவரும் வகையில் திட்டங்களை முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார்.

பொதுமக்களின் தேவைகளான வீட்டுமனைப் பட்டா, முதியோர் ஓய்வூதிய திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட குறைகளை தீர்க்கும் வகையில் அவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி விழாவினை சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் மெய்யநாதன் பேசும் போது,எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆட்சி செய்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சியில் அதிகப்படியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

முதலமைச்சர் கலந்துகொள்ளும் விழாவை அனைத்து தரப்பினரும் பெருமை கொள்ளும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.


Tags:    

Similar News