புதுக்கோட்டை கோவில் திருவிழாவில் மோதல்
- தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி கீரனூரில் ஆர்ப்பாட்டம்
- போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே அம்பேத்கர் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு போலீசாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள உப்பிலிக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஒரு சமூக மக்களை, கோயில் திருவிழாவின் போது கொத்தம ங்கலபட்டியை சேர்ந்த மாற்று சமூக இளைஞர்கள் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பெண்கள் உட்பட மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் இந்த விவகாரத்தில் இதுவரையில் குற்றவாளிகளை கைது செய்யவில்லை என குற்றம் சாட்டியும், தாக்குதல் நடத்திய இளைஞர்களை கைது செய்ய வலியுறுத்தியும், அம்பேத்கர் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகத்தை மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, இளையவயல் எனும் இடத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசாரரோடு ஆர்ப்பாட்டகாரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து ஜாதிய வன்கொடுமைகளும் தீண்டாமைக் கொடுமையும் அதிகரித்துள்ளதாகவும் இதனை தடுக்க காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் தவறிவிட்டதாகவும் கூறி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். அப்போது மாத்தூர் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையின் போது, தாக்கியவர்களை இன்னும் மூன்று தினங்களில் கைது செய்து விடுவோம் உறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.