ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை -அமைச்சர் உறுதி
- ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
- ஆசிரியர்களுடன் அன்பில்” நிகழ்ச்சி
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், 'ஆசிரியர்களுடன் அன்பில்" நிகழ்ச்சியில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் முன்னிலையில் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி, கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி பேசும் போது, தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கொரோனா காலத்தில் கற்றல், கற்பித்தல் திறன்களை தடைபடாமல் மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தொடங்கி வைத்து, இன்று தமிழகம் முழுவதும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இங்கு வருகை தந்துள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பல்வேறு விதமான கோரிக்கைகள் இருக்கும். இக்கோரிக்கைகள் அனைத்தும் தமிழ்நாடு முதலமைச்சரின் கனிவான கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர், மாணவர்களிடையேயான உறவுகள் இரத்த பந்தம் பாசத்தை போன்றதாகும்.
எனவே ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களை கல்வியில் முன்னேற்றி அவர்களை வெற்றிபெற வைப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு பொதுமக்களிடையே கிடைக்கப்பெறும் அங்கீகாரமாகும். ஆசிரியர் மனசுப் பெட்டி மூலம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்து நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைசசர் தெரிவித்தார்.