நாவல்ஏரியில் நரிக்குறவ பழங்குடியினத்தை சேர்ந்த 20 குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பு
- நாவல்ஏரியில் நரிக்குறவ பழங்குடியினத்தை சேர்ந்த 20 குழந்தைகள் பள்ளியில் சேர்ந்தனர்
- நாவல் ஏரி அருகே 30-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக கொட்டகை அமைத்து குடியிருந்து வருகின்றனர்
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டையில் பள்ளி செல்லாமல் இருந்த நரிக்குறவர் பழங்குடியினத்தை சேர்ந்த குழந்தைகள் அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் நாவல் ஏரி அருகே 30-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக கொட்டகை அமைத்து குடியிருந்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் பள்ளியில் சேர்க்காமல் பெற்றோர்களுடன் வியாபாரம் செய்வதும் குடியிருப்பு பகுதியில் தங்கி இருப்பதுமாக இருந்து வந்தனர்.
இந்த நிலையில் 20 நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளை, சமூகப் பணியாளர் எட்வின், கந்தர்வகோட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் சேர்க்க முயற்சி எடுத்தார். பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி அந்த 20 குழந்தைகளையும் அரசு நடுநிலைப் பள்ளியில் சேர்த்தார். மேலும் அவர்களுக்கு அரசின் அனைத்து உதவிகளும் கிடைக்க ஏற்பாடு செய்வதாக அவர் உறுதி கூறினார். இந்த பள்ளி சேர்க்கையின் போது, அப்பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.