அறந்தாங்கியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை-ரூ.20 ஆயிரம் கொள்ளை
- அறந்தாங்கியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை-ரூ.20 ஆயிரம் கொள்ளை போனது
- போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கே.கே.நகர் 1-ம் வீதி பகுதியைச் சேர்ந்தவர் பதூர்நிஷா (வயது 55). கனவர் முகமது மீரான் இறந்துவிட்ட நிலையில் வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக அரசர்குளத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து இன்று வீட்டிற்கு வந்த பதூர்நிஷா வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 10 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்க பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உடனடியாக இதுகுறித்து அறந்தாங்கி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்புகள் அதிகம் நிறைந்த பகுதியில் வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.