மேட்டுப்பாளையத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
- சிட்டேபாளையம் கிராம மக்கள் கடந்த 25 ஆண்டுகாலமாக வீட்டு மனைப்பட்டா வழங்க கோரி போராடி வருகின்றனர்.
- தேர்வு செய்யப்பட்ட 92 பயனாளிகளில் உள்ளூரை சேர்ந்த 52 பேருக்கு பட்டா வழங்கப்படும் என உறுதி
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம், இரும்பொறை ஊராட்சியில் உள்ள சிட்டேபாளையம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட தலித் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் கடந்த 25 ஆண்டுகாலமாக வீட்டு மனைப்பட்டா வழங்க கோரி போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் சிட்டேபாளையம் பகுதியில் 2.50 ஏக்கர் பரப்பளவில் ஆதிதிராவிடர் மட்டுமின்றி வெளியூர் நபர்களுக்கும் பட்டா வழங்கப்போவதாக தகவல் வெளியானது. இதற்காக கோவை, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், மூலத்துறை ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் திரண்டு வந்திருந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிட்டேபாளையம்வாசிகள், ஆதிதிராவிடர்களுக்கு பட்டா வழங்குவதில் முன்னுரிமை தர வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நிலத்தை அளவீடு செய்ய வந்திருந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம் தனி தாசில்தார் ரங்கராஜன், இரும்பொறை ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரி மற்றும் சிறுமுகை போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 92 பயனாளிகளில் உள்ளூரை சேர்ந்த 52 பேருக்கு பட்டா வழங்கப்படும், அதன்பிறகு மற்றவர்களுக்கு வழங்குவோம் என உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து அங்கு போராட்டம் கைவிடப்பட்டது.