உள்ளூர் செய்திகள்

சின்னம்பேடு ஊராட்சியில் நிலத்தை அளக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Published On 2022-11-19 15:57 IST   |   Update On 2022-11-19 15:57:00 IST
  • நெற்பயிர் விளைந்துள்ளதால் பின்னர் சர்வே செய்யும்படி நிலத்தை விற்றவர் வலியுறுத்தல்
  • வருவாய்த்துறையினரும், காவல்துறையினரும் ஒப்புக் கொள்ளாததால் வாக்குவாதம்

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு ஊராட்சியில் தனி நபர் ஒருவருக்கு சொந்தமான சுமார் 1.40 ஏக்கர் விவசாய நிலம் ஒன்று ஆதிதிராவிட ஆரம்ப பள்ளி அருகே உள்ளது. இதில், 30 சென்ட் நிலத்தை கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அவர் விற்று விட்டாராம்.

இந்நிலையில், நிலத்தை வாங்கிய நபர் நேற்று அந்த நிலத்தை வருவாய் துறையைச் சேர்ந்த சர்வேயர் மற்றும் ஆரணி காவல் நிலைய போலீசாருடன் திடீரென அளந்து கல்பதிக்க அங்கு வந்தார். நெற்பயிர் விளைந்துள்ள அந்த விவசாய நிலத்தை அளந்து கல் பதிக்க முயன்றனர். ஆனால், நிலத்தை விற்பனை செய்தவர் தற்போது இந்த நிலத்தில் நெற்பயிர் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. எனவே, நெல் அறுவடை முடிந்த பின்னர் நிலத்தை அளந்து கொள்ளுங்கள். கல் பதிக்கும் பணியை சற்று காலதாமதம் செய்யுங்கள் என்று வலியுறுத்தினாராம். ஆனால், அதற்கு வருவாய்த்துறையினரும், காவல்துறையினரும் ஒப்புக் கொள்ளவில்லையாம்.

இச்செய்தி அப்பகுதியில் காட்டுத் தீயாக பரவியது. இதனால் கிராம மக்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு, நெற்பயிர் சேதமாவதை தடுக்க கல் பதிக்கும் பணியை அறுவடைக்குப் பின்னர் செய்யுங்கள் என்று கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் செய்வது அறியாது வருவாய் துறையினரும், காவல்துறையினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இப்பிரச்சினையால் சுமார் இரண்டு மணி நேரம் இப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.

Similar News