உள்ளூர் செய்திகள் (District)

சொத்துவரி செலுத்துவோர் ஆதார், பான் எண் விபரங்களை அளிக்க உத்தரவு- பொதுமக்கள் தயக்கம்

Published On 2023-05-09 09:35 GMT   |   Update On 2023-05-09 09:35 GMT
  • விபரங்களை வாட்ஸ் அப்பில் பகிர மாநகராட்சி கூறி உள்ளதால் பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
  • ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் குடியிருப்பாளர்களின் தரவுத் தளம் புதுப்பிக்கப்படவில்லை.

திருநின்றவூர்:

சென்னை புறநகர் பகுதியான ஆவடி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. இதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் ஆவடி மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களில் சொத்துவரி செலுத்துபவர்கள் தங்களது ஆதார், பான் எண் உள்ளிட்ட விபரங்களை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

அந்த கடித்தத்தில் சொத்து வரி செலுத்துபவர்கள் தங்களது செல்போன் எண், குடும்ப அட்டை எண், ஆதார், இ- மெயில் முகவரி, பான் எண், வணிக நிறுவனங்களின் ஜி.எஸ்.டி. எண் மற்றும் மின் இணைப்பு எண் உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் பூர்த்தி செய்யப்பட்ட அந்த கடிதத்தை புகைப்படம் எடுத்து குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்ப உத்தரவிட்டு உள்ளனர்.

ஆனால் விபரங்களை வாட்ஸ் அப்பில் பகிர மாநகராட்சி கூறி உள்ளதால் பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். மேலும் இந்த விபரம் சேகரிப்பு எதற்காக நடத்தப்படுகிறது என்ற தெளிவான விளக்கமும் அறிவிக்கப்படவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பொது மக்கள் தொடர்ந்து குழப்பத்தில் உள்ளனர்.

இது குறித்து ஆவடியை சேர்ந்த ஒருவர் கூறும்போது, 'சொத்துவரி செலுத்துவோரிடம் இருந்து இது போன்ற விவரங்கள் எதற்காக கேட்கப்படுகின்றன என்று மாநகராட்சி தெளிவான விளக்கம் கூறவில்லை.

மின்இணைப்பு எண் மற்றும் பான் எண் ஆகியவற்றை வழங்க பொது மக்கள் தயங்குகின்றனர்' என்றார்.

இதுகுறித்து ஆவடி மாநகராட்சி கமிஷனர் தர்பகராஜ் கூறும்போது, 'ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் குடியிருப்பாளர்களின் தரவுத் தளம் புதுப்பிக்கப்படவில்லை. பல சொத்துக்கள் வேறு ஒருவருக்கு மாறி உள்ளது. இதுபற்றிய சரியான விபரங்கள் இல்லை.

மேலும் எங்களிடம் உள்ள பெரும்பாலான தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவேதான் தற்போதைய சரியான விபரங்களை கேட்டு பதிவு செய்து வருகிறோம். பொது மக்கள் இது குறித்த விபரங்களை தயக்கம் இல்லாமல் அளிக்கலாம் என்றார்.

Tags:    

Similar News