மெட்ரோ ரெயிலில் பெண் பயணிகளிடம் ராக்கிங், கேலி கிண்டல் நடக்கிறதா? 30 ஆயிரம் பேரிடம் ஆய்வு
- நிர்வாகம் ஒரு களஆய்வை நடத்த திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.
- பயணத்தின்போது ஏதாவது பிரச்சினை உள்ளதா? எனவும் ஆய்வு நடைபெறுகிறது.
சென்னை:
சென்னையில் மெட்ரோ ரெயில்களில் தினமும் சராசரியாக 2.5 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். இதில் 30 முதல் 35 சதவீதம் பெண் பயணிகள் பயணிக்கின்றனர்.
அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள், அதிகாரிகள், மாணவர்கள் என பலதரப்பட்ட பிரிவினரும் பயணிக்கின்றனர்.
மெட்ரோ ரெயிலில் பெண்களுக்கு பாதுகாப்பு எப்படி உள்ளது. அதனை மேம்படுத்துவது குறித்து நிர்வாகம் ஒரு களஆய்வை நடத்த திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.
பெண் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு எந்த பகுதியில் தேவை, இன்னும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து சென்னையில் மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:-
பெண்களின் பாதுகாப்பு குறித்து கடந்த 2 வாரத்திற்கு முன்பு ஆய்வு தொடங்கப்பட்டது. 30 ஆயிரம் பெண்களிடம் பாதுகாப்பு குறித்து கருத்து கேட்கப்படுகிறது. இதுவரையில் 1,500 பேரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கணக்கெடுப்பு அவசியமானது.
பெண்களுக்கு தனி பெட்டிகள் உள்ளன. இந்த பெட்டிகளில் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது. ஆண்கள் அந்த இடங்களை ஆக்கிரமிக்கிறார்களா? ரெயில்கள் மற்றும் ரெயில் நிலைய வளாகங்களில் ராக்கிங், கேலி கிண்டல், துன்புறுத்தல் எதுவும் சந்தித்தீர்களா என்பது குறித்த கேள்வி கேட்கப்படுகிறது.
பயணத்தின்போது ஏதாவது பிரச்சினை உள்ளதா? எனவும் ஆய்வு நடைபெறுகிறது. பாதுகாப்பு பணியாளர்கள் எந்தெந்த பகுதிக்கு அதிகப்படுத்த வேண்டும்.
பாதுகாப்பு குறைவான இடங்கள் எவை? என்பது பற்றி பெண்களிடம் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் பயணிகள் எண்ணிக்கை மேலும் உயரும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.