உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் ஜப்தி

Published On 2023-07-13 08:12 GMT   |   Update On 2023-07-13 08:12 GMT
  • பெரம்பலூர் பேருந்து நிலையத்திற்கு வந்த அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
  • விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்காததை தொடர்ந்து கோர்ட் உத்தரவு

பெரம்பலூர்,

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, வாளாடி கிராமத்தை சேர்ந்தவர் ரபீக். இவரது மகன் சீராஜ் (வயது 23). ஆப்டீசியனான இவர் அரியலூரில் கண் கண்ணாடி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ந்தேதி மாலையில் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அரியலூர்-திருச்சி சாலையில் பூவாளூரில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று சீராஜ் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சீராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சீராஜின் மனைவி கவுசிநிஷா இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ரூ.25 லட்சத்து 6 ஆயிரத்து 712-ஐ இழப்பீடாக கவுசிநிஷாவுக்கு வழங்க திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந்தேதி கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கவுசிநிஷாவுக்கு இழப்பீடு வழங்காமல் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனால் தற்போது வட்டியுடன் ரூ.38 லட்சத்து 92 ஆயிரத்து 547-ஐ இழப்பீடாக வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அந்த இழப்பீட்டு தொகையையும் அரசு போக்குவரத்து கழகம் வழங்காததால், பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழக பஸ்களில் ஏதேனும் ஒன்றை ஜப்தி செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி திருச்சியில் இருந்து சென்னை செல்வதற்காக பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்துக்கு வந்த அரசு பஸ் ஒன்றை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டிற்கு கொண்டு சென்றனர். 

Tags:    

Similar News