நகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் முற்றுகை போராட்டம்
பெரம்பலூர்,
பெரம்பலூர் நகராட்சியில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமையில், அச்சங்கத்தை சேர்ந்த நகராட்சி தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அப்போது அவர்கள் கூறுகையில், பெரம்பலூர் நகராட்சியில் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் உள்பட ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊழியர்களின் ஊதியத்தில் மாதந்தோறும் பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கு (இ.பி.எப்.) தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் அந்த நிதி ஊழியர்களின் இ.பி.எப். கணக்கில் செலுத்தப்படுவதில்லை. இது குறித்து பெரம்பலூர் நகராட்சி ஆணையாளரிடம் பலமுறை முறையிட்டு உள்ளோம். ஒரு வார காலத்திற்குள் கணக்கீடு செய்து, வங்கி கணக்கில் அந்த தொகை செலுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் பல மாதங்கள் கடந்தும் இதுவரையில் பிடித்தம் செய்த தொகை வழங்கப்படவில்லை. மேலும் கடந்த மே மாதத்தில் இருந்து புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே முன்னாள் மாவட்ட கலெக்டர் அறிவித்த தினக்கூலி ரூ.580-ம் வழங்கப்படவில்லை. மே மாதத்திற்கு முழு ஊதியமும் வழங்கப்படவில்லை.எனவே ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த இ.பி.எப். தொகையை கணக்கீடு செய்து செலுத்தாத தொகையை (இரண்டு ஒப்பந்த காலங்களில்) வழங்கிடவும், கலெக்டர் அறிவித்த தினக்கூலி ரூ.580-ஐ வழங்கிடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். பின்னர் அவர்களில் சிலர் சென்று கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனுவினை கொடுத்தனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.