உள்ளூர் செய்திகள்

சிப்காட் தொழில் பூங்கா திறப்பு விழா

Published On 2022-11-29 10:35 GMT   |   Update On 2022-11-29 10:35 GMT
  • சிப்காட் தொழில் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  • பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்

பெரம்பலூர்:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக திருச்சியில் இருந்து பெரம்பலூருக்கு கார் மூலம் வருகை தந்தார். இதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள முதல் சிப்காட் தொழில் பூங்காவை திறந்து வைத்தார்.

சிப்காட் தொழில் பூங்காவில் பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கும் அடிக்கல் நாட்டினார். சிப்காட் தொழில் பூங்கா தமிழக அரசின் 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், கோவை, பெரம்பலூர், மதுரை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தபடி, பெரம்பலூர் மாவட்டத்தில், எறையூர் கிராமத்தில் 243.49 ஏக்கர் பரப்பளவில் இந்த சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக குறுகிய காலத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் அமையவுள்ள பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தோடு, பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்கா மற்றும் அதன் 10 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலமாக ரூ.740 கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன், 4 ஆயிரத்து 500 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது. இதுவரை மொத்தம் 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் ரூ.2 ஆயிரத்து 440 கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன் 29 ஆயிரத்து 500 ேபருக்கு வேலை வாய்ப்பும் உருவாக்கப்பட உள்ளது.

மேலும் 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் சேர்த்து, எதிர்காலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைய உள்ள தோல் அல்லாத காலணி மற்றும் அதன் தொகுப்பு தொழில் நிறுவனங்களின் மூலம் ஈர்க்கப்படும் முதலீடு ரூ.5 ஆயிரம் கோடியை எட்டும் என்றும், 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் . பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழ்நாடு இளைஞர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கிடும் வகையில் தமிழ்நாடு அரசு மாநில பொருளாதாரத்தை வலுவடைய செய்து வருகிறது.

இவ்விழாவில் அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு, சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ. ராசா, தொல். திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்னி தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சுந்தரவல்லி, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ. வெங்கடபிரியா தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் செயல் இயக்குநர் நிஷாந்த் கிருஷ்ணா, கோத்தாரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜின்னா ரஃபிக் அஹமத், எவர்வேன் நிறுவனத்தின் தலைவர் ராங் வு சேங் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News