தனியார் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
- தனியார் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- தோல் நோயால் அவதிபட்டு வந்தார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஈச்சம்பட்டி இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருக்கு செல்வி என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். ராமச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டார். 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இதனால் செல்வி தனது கடைசி மகளான காவ்யாவுடன் (வயது 21) வசித்து வந்தார். காவ்யா பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி. ஊட்டச்சத்து-உணவியல் படிப்பை மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். காவ்யாவிற்கு கடந்த 3 ஆண்டுகளாக தோல் நோய் ஏற்பட்டு, அதற்கு பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும், தனியார் சித்த மருத்துவத்திலும் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தோல் நோயால் மிகவும் அவதிப்பட்டு வந்த காவ்யா கல்லூரிக்கு செல்லாமல் விடுப்பில் வீட்டிலேயே இருந்து வந்தார்.
நேற்று காலை 10 மணியளவில் செல்வி மளிகை பொருட்கள் வாங்குவதற்காக பெரம்பலூருக்கு வந்து விட்டார். இதனால் காவ்யா வீட்டில் தனியாக இருந்தார். மளிகை பொருட்களை வாங்கி கொண்டு மதியம் வீட்டிற்கு சென்று செல்வி பார்த்தபோது, அறையில் காவ்யா துப்பட்டாவால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
"