உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் ஆதியோகி சிவன் சிலை ரத ஊர்வலம்

Published On 2022-12-28 14:54 IST   |   Update On 2022-12-28 14:54:00 IST
  • ஆதியோகி சிவன் சிலை ரத ஊர்வலம் நடந்தது.
  • அகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் முன்பு பக்தர்கள் சார்பில் பூதகண வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்

கோவை அருகே வெள்ளியங்கிரி மலையில் உள்ள ஈஷா யோகா மையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிவன் சிலை முன்பு வருகிற பிப்ரவரி மாதம் 18-ந் தேதியன்று மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. இதையொட்டி பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆதியோகி உற்சவர் சிலை ரத ஊர்வலமாக தமிழ்நாடு முழுவதும் வலம் வருகிறது. இந்த ரதம் நேற்று முன்தினம் பெரம்பலூருக்கு வந்தது. ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்தில் ஆதியோகி சிவன் ரதத்திற்கு குரு பூஜை நடந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் இந்த ரத ஊர்வலம் பெரம்பலூரில் காந்திசிலை வழியாக சென்று அகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலை அடைந்தது. கோவில் முன்பு பக்தர்கள் சார்பில் பூதகண வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மகாதீபாராதனை காட்டப்பட்டு, பொதுமக்களுக்கு பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆதியோகி சிலையை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து ஆதியோகி சிலை ரதம், சங்குப்பேட்டை, ரோவர் நூற்றாண்டு வளைவு, புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் சென்றது. அங்கு ஆதியோகி சிலையை பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் ரத ஊர்வலம் தொழுதூர் நோக்கி சென்றது. இந்த ரதம் மீண்டும் நேற்று இரவு பெரம்பலூர் வந்தடைந்தது. இன்று (புதன்கிழமை) காலை மீண்டும் ரத ஊர்வலம் சிறுவாச்சூர், ஆலத்தூர் கேட், கொளக்காநத்தம் ஆகிய பகுதிகளுக்கு சென்றது.

Tags:    

Similar News