உள்ளூர் செய்திகள்

கடலூர் லாரன்ஸ்ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ள காட்சி. 

தீபாவளி பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் குவிந்தனர்: கடலூர் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

Published On 2022-10-22 09:20 GMT   |   Update On 2022-10-22 09:20 GMT
  • தீபாவளிபண்டிகை கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் கைவரிசை காட்டுவார்கள்.
  • லாரன்ஸ்ரோடு பகுதியில் உயர்கோபுரம் அமைத்து போக்குவரத்து மற்றும் கொள்ளையர்களை கண்காணித்தபடி உள்ளனர்.

கடலூர்:

தீப திருநாளாம் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (24-ந் தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்ட மக்கள் தீபாவளி புத்தாடை வாங்குவதற்கு குவிந்த வண்ணம் உள்ளனர். கடலூர் மாவட்டம் கிராமங்கள் உள்ளடக்கிய பகுதியாகும். இந்த கிராம மக்கள் எந்த ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றாலும் கடலூர் துறைமுகம் மற்றும் திருப்பாதிரிபுலியூர்தான் வரவேண்டும். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே உள்ளதால் கடலூர் மாவட்ட கிராம மக்கள் திருப்பாதிரிபுலியூருக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் கடலூர் லாரன்ஸ்ரோடு, இம்பீரியல் சாலை, சுப்புராயலுசெட்டி தெரு, நகை கடை வீதிகளில் படையெடுக்கிறார்கள். இதனால் கடலூர் நகர் பகுதியில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதியவண்ணம் உள்ளது. இதன் காரணமாக இம்பீரியல் சாலை, மஞ்சக்குப்பம்மணிக்கூண்டு, நேதாஜி சாலை மற்றும் முக்கிய வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. நேரம் ஆக ஆக மக்கள் அதிகளவில் குவிவதால் இம்பீரியயல் சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

தீபாவளிபண்டிகை கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் கைவரிசை காட்டுவார்கள். இதனை கண்காணிக்க கடலூர் மாவட்டத்தில் 1,600 போலீசார் ரோந்து வருகிறார்கள். அதோடு டிரோன் காமிரா மூலமும் திருடர்கள், செல்ேபான் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்தபடி உள்ளனர். இது தவிர போலீஸ் டி.எஸ்.பி. கரிக்கால்பாரிசங்கர் தலைமையில் திருப்பாதிரிபுலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மேற்பார்வையில் லாரன்ஸ்ரோடு பகுதியில் உயர்கோபுரம் அமைத்து போக்குவரத்து மற்றும் கொள்ளையர்களை கண்காணித்தபடி உள்ளனர். மேலும் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலை ஓர வியாபாரிகளும் துணிகளை விற்பனை செய்ய வந்த வண்ணம் உள்ளனர். இவர்களிடம் துணிரகங்களை வாங்குவதற்கு கிராமமக்கள் ஒட்டு மொத்தமாக குவிவதால் கடலூர் நகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. 

Tags:    

Similar News