உள்ளூர் செய்திகள்

கூடலூரில் மழையால் ஏற்பட்ட மண்சரிவை அகற்றாததால் பொதுமக்கள் அவதி

Published On 2022-07-27 06:57 GMT   |   Update On 2022-07-27 06:57 GMT
  • கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடர் கனமழை பெய்தது.
  • மழை பெய்ததால் நடைபாதையில் விழுந்த மண் குவியல்களை அகற்ற முடியவில்லை.

கூடலூர்

கூடலூர் பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடர் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் பாலம் உடைந்தது. தொடர்ந்து மண் சரிவுகள் ஏற்பட்டு வீடுகள் சேதம் அடைந்தன. கூடலூர் நகரின் மையப்பகுதியில் கிளை நூலகம் உள்ளது. இதன் முன்பு நகராட்சி நடைபாதை செல்கிறது.

தொடர் மழையால் கிளை நூலகத்தின் வளாகத்தில் உள்ள மேடான இடத்தில் இருந்து மண் சரிவு ஏற்பட்டு நடைபாதையில் விழுந்தது. தொடர்ந்து மழை பெய்ததால் நடைபாதையில் விழுந்த மண் குவியல்களை அகற்ற முடியவில்லை.

மேலும் மக்களின் நடமாட்டமும் குறைவாக காணப்பட்டது.  தற்போது மழையும் குறைந்து விட்டதால் இயல்பு நிலை திரும்பி உள்ளது. ஆனால், இதுவரை நடைபாதையில் விழுந்து கிடக்கும் மண்குவியல்கள் அகற்றப்படவில்லை. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமத்துக்கு ஆளாகினர். தொடர்ந்து மண் குவியல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்பகுதியில் அனைத்து வங்கிகளும் செயல்படுகிறது. மேலும் காலை, மாலை நேரத்தில் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நடைபாதையில் நடந்து முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

சில சமயங்களில் பெண்கள், வயதானவர்கள் தடுமாறி கீழே விழும் அவல நிலையும் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடைபாதையில் கிடக்கும் மண் குவியல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News