குழந்தைகளுக்கு பெற்றோர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
- குன்னூர் அருகே நடந்த கூட்டத்தில் அதிகாரி வலியுறுத்தல்
- கடந்த மாதத்தில். ஆறு குழந்தைகளை அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டு பராமரித்து வருகிறோம்.
அருவங்காடு,
நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சமூகப் பணி திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் பெண் குழந்தைகளை பாலியல் கொடுமைகளிலிருந்து மீட்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் நகரப் பகுதி மட்டும் அல்லாமல் பேரூராட்சிகள், வட்டார அளவில், கிராம அளவிலும் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் ஒரு பகுதியாக. குன்னூர் அருகே உள்ள உளிகள் பேரூராட்சியில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டத்திற்கு. பேரூராட்சி தலைவர் ராதா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட குழந்தைகள் நல சமூகப் பணியாளர் சிந்து பேசியதாவது:-
குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை குறித்து பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை யாரேனும் கட்டாயப்படுத்தி வன்கொடுமையில் ஈடுபடுத்தி இருந்தால் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கடந்த மாதத்தில். ஆறு குழந்தைகளை அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டு பராமரித்து வருகிறோம்.
ஒரு சில குழந்தைகள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு பயந்து அவர்களை பலாத்காரம் செய்த நபர்களை விட்டு வேறொரு நபர்களை கை காட்டுவதால் சம்பந்தம் இல்லாத ஒரு சிலர் இதுபோன்ற வழக்கில் சிக்கி வருகின்றனர்.
பொதுவாக இத்தொடர்பான புகார்கள் வந்தவுடன் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் அறிக்கை கிடைக்க ஆறு மாதங்கள் வரை ஆகும். இதனால் ஒரு சிலர் தவறு செய்யாமலே தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
எனவே பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகளை அவ்வப்போது கண்காணித்து அவர்களிடம் நண்பர்களாக பழகி. அவர்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை பயமின்றி கூற ஊக்க வார்த்தைகளை கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் அச்சத்தை தவிர்த்து பயமின்றி பெற்றோரிடம் கூற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.