உள்ளூர் செய்திகள்

கடலூர் வள்ளியம்மை பஜாரில் வரி பாக்கி வைத்துள்ள கடைகளில் இறுதி நோட்டீைஸ மாநகராட்சி அதிகாரிகள் ஒட்டினர்.

கடலூரில் பரபரப்பு: 3 நாட்களில் வரி செலுத்தாவிட்டால் பொருட்கள் ஜப்தி செய்யப்படும் நோட்டீஸ் ஒட்டிய மாநகராட்சி அதிகாரிகள்

Published On 2023-02-17 09:20 GMT   |   Update On 2023-02-18 10:22 GMT
வரி கட்டாத கடைகளுக்கு முன்பு குப்பைத் தொட்டிகள் வைத்தும், கடைகளுக்கு சீல் வைத்தும் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் மாநகராட்சியில் வரி பாக்கி மற்றும் வாடகை பாக்கி வசூல் செய்ய மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.வரி கட்டாத கடைகளுக்கு முன்பு குப்பைத் தொட்டிகள் வைத்தும், கடைகளுக்கு சீல் வைத்தும் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் தற்போது வரி மற்றும் வாடகை பாக்கி கணிசமாக வசூலாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கடலூர் லாரன்ஸ் ரோட்டில் வள்ளியம்மை பஜார் உள்ளது. இந்த பஜாரில் 16 கடைகளுக்கு வரி செலுத்தவில்லை. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் குப்பைத்தொட்டிகளை பஜாரின் வாசலில் வைத்து கடைகளுக்கு சீல் வைக்க முயன்றனர்.

இதனை தொடர்ந்து அங்கிருந்த கடை உரிமையாளர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் உத்தரவின் பேரில் வள்ளியம்மை பஜாரில் உள்ள 16 கடைகளுக்கு நேரில் சென்ற அதிகாரிகள், எந்தெந்த கடைகளுக்கு எவ்வளவு வரி பாக்கி என குறிப்பிட்டு அந்தந்த கடைகளில் இறுதி நோட்டீஸ் ஒட்டினர். இதில் மூன்று நாட்களுக்குள் வரி செலுத்தவில்லை என்றால் கடைகளில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யப்படும் எழுதப்பட்டிருந்தது. இந்த சம்பவம் வர்த்தகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News