உள்ளூர் செய்திகள்

நெல்லிக்குப்பம் அருகே நிவாரணம் கேட்டு ஊராட்சி மன்ற தலைவர்கள், பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2024-12-16 12:08 IST   |   Update On 2024-12-16 12:08:00 IST
  • கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.
  • தினந்தோறும் எங்கள் போராட்டம் தொடரும்.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஃபெஞ்சல் புயல் மழை மற்றும் வெள்ள பெருக்கு காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் நிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் 2 ரூபாய் நிவாரணத் தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் அண்ணா கிராமம் ஒன்றியத்திற்குட்பட்ட 12 ஊராட்சிக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு 12 ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசியல் கட்சியினர் பொதுமக்கள் நெல்லிக்குப்பம் அடுத்த பாலூர் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது தாசில்தார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து அண்ணா கிராமம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் வெங்கட்ராமன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கடலூர் கலெக்டரை நேரில் சந்தித்து நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என மனு அளித்தனர்.

இந்த நிலையில் நிவாரணத் தொகை வழங்கவில்லை என்றால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் வேல்முருகன் எம்.எல்.ஏ. எனது தொகுதிக்குட்ட்பட்ட பண்ருட்டி அண்ணாகிராமம் ஒன்றிய பகுதியில் நிவாரணத் தொகை வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுப்பி இருந்தார்.

இதனை தொடர்ந்து இன்று காலை 12 ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அந்தந்த பகுதிகளில் இருந்து ஊர்வலமாக ஏராளமானோர் பாலூர் பகுதியில் திரண்டனர்.

பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர்-பாலூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.

அப்போது கலெக்டர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி எங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கினால் மட்டுமே நாங்கள் போராட்டத்தை கலைப்போம் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்த நிலையில், தாசில்தார் ஆனந்த் மற்றும் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது எங்களுக்கு நிவாரணத்தை வழங்கினால்மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம். மேலும் தினந்தோறும் எங்கள் போராட்டம் தொடரும் என ஆக்ரோஷமாக தெரிவித்தனர். மேலும் பாலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மறியல் போராட்டத்தில் தொடர்ந்து பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் கடலூர் பாலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News