உள்ளூர் செய்திகள்

சூலூர் அருகே கொட்டும் மழையில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-06 14:44 IST   |   Update On 2023-07-06 14:44:00 IST
  • இந்த ஆர்ப்பாட்டத்தில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
  • ஆகஸ்டு மாதம் 1-ந்தேதிக்குள் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும்.

சூலூர்,

சூலூர் அருகே செஞ்சேரி மலையில் மந்திரகிரி வேலாயுதசாமி கோவில் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த மதுக்கடையை அகற்றக் கோரி அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த 4 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் கோவை வடக்கு மாவட்ட பாரதீய ஜனதா சார்பில் செஞ்சேரி மலையில் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் மோகன் மந்திராசலம் தலைமை தாங்கினார். காமாட்சிபுரி ஆதீனம் சாந்தஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மணிகண்டன், சுல்தான்பேட்டை ஒன்றிய பொதுச்செயலாளர் ரவி உள்பட 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அடை மழை பெய்தது. இருந்தபோதிலும் ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தவர்கள் அங்கிருந்து நகராமல் மதுக்கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் செஞ்சேரிமலையில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும், மதுவை ஒழிப்போம், நாட்டை காப்போம், ஆகஸ்டு மாதம் 1-ந்தேதிக்குள் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும். இல்லை என்றால் கடைக்குள் புகுந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

காமாட்சிபுரி ஆதீனம் சாந்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆர்ப்பாட்டத்தில் பேசும் போது இந்தியா மதுவில்லாத நாடாக மாற நாம் போராட வேண்டும். செஞ்சேரி மலையில் உள்ள மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று இப்பகுதியில் அனைவரும் கட்சி பேதமின்றி கோரிக்கை வைக்கின்றனர். இதனை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News