உள்ளூர் செய்திகள்

விவசாய நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு

Published On 2023-04-28 15:03 IST   |   Update On 2023-04-28 15:03:00 IST
  • பாகலூர் போலீசாரின் பாதுகாப்புடன் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
  • மின்வாரிய ஊழியர்கள், காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுக்கா பாகலூர் அருகேயுள்ள சேவகானப்பள்ளி கிராமத்தில் தனியார் நிறுவனத்திற்கு மின்சாரம் கொண்டு செல்ல உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் ஏற்கனவே ஏராளமான உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு பணிகள் முடிவடைந்த நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி குண்டப்பா என்பவரின் விவசாய நிலத்தில் மின்வாரிய ஊழியர்கள் நேற்று பாகலூர் போலீசாரின் பாதுகாப்புடன் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

இந்த உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயி குண்டப்பா மற்றும் குடும்பத்தினர் நேற்று உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வந்த மின்வாரிய ஊழியர்கள், காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தங்களிடம் மின்வாரியத்துறையினர் எந்த அனுமதியையும் பெறாமல், விவசாய நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகளை மேற்கொள்வது தவறான செயல் என வாக்குவாதம் செய்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இலவச மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் முறையிட்டனர்.

அதற்கு மின்வாரியத்துறை அதிகாரிகள் பதிலளிக்கையில், விவசாய நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைக்க கூடாது என குண்டப்பா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் மின்வாரியத்துறை மூலம் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது என அந்த குடும்பத்தினரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த பணிகளுக்காக எடுக்கப்பட்ட நிலத்திற்கான இழப்பீடு மற்றும் பயிர் சேத இழப்பீடு ஆகியவை குண்டப்பா குடும்பத்தினருக்கு வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் நீண்ட நேரம் பரபரப்பு காணப்பட்டது. உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியையொட்டி, ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

Tags:    

Similar News