நன்னடத்தை விதியை மீறிய வாலிபருக்கு 1 ஆண்டு ஜெயில்
- முகிந்தர் அமர்நாத் கடந்த சில நாட்களுக்கு முன்பு நரசிங்க புரத்தை சேர்ந்த நபரை கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார்.
- மப்பேடு போலீசார் திருவள்ளூர் ஆர்.டி.ஓ.விடம் நன்னடத்தை பிணைய பத்திரத்தை மீறிய முகிந்தர் அமர்நாத் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனு அளித்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முகிந்தர் அமர்நாத் (25). இவர் கடந்த ஜனவரி மாதம் அப்பகுதியை சேர்ந்த நபரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் மப்பேடு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மேலும் இவர் அடிக்கடி குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த காரணத்தால் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீண்டும் ஜாமீனில் வெளியே வந்தார். ஜாமீனில் வந்த அவர் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்து வந்தார்.
இதனைத்தொடர்ந்து அவரை திருவள்ளூர் ஆர்.டி.ஓ இதுபோன்ற குற்றசெயல்களில் ஒரு வருடம் வரை ஈடுபடக்கூடாது என எச்சரித்து நன்னடத்தை உறுதிமொழி பிணைய பத்திரம் பெற்று அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் முகிந்தர் அமர்நாத் கடந்த சில நாட்களுக்கு முன்பு நரசிங்க புரத்தை சேர்ந்த நபரை கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார். இதைத் தொடர்ந்து மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மீண்டும் முகிந்தர் அமர்நாத்தை கைது செய்து சிறையில் அடைத்தார். இதுகுறித்து மப்பேடு போலீசார் திருவள்ளூர் ஆர்.டி.ஓ.விடம் நன்னடத்தை பிணைய பத்திரத்தை மீறிய முகிந்தர் அமர்நாத் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனு அளித்தார்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட திருவள்ளூர் ஆர்.டி.ஓ அசோகன் நன்னடத்தை பிணைய பத்திர விதியை மீறி குற்றசெயலில் ஈடுபட்டதால் முகிந்தர் அமர்நாத்தை ஒரு வருடம் ஜெயிலில் அடைக்கவும் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.