கோத்தகிரி கூலித்தொழிலாளி கொலையில் மேலும் ஒரு வாலிபர் கைது
- தாயை பற்றி தவறாக பேசியதால் அடித்துக்கொன்றதாக வாக்குமூலம்
- கொலை பற்றி மனைவியிடம் உளறியதால் போலீசில் சிக்கினார்
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்த கிரி பொன்னூர் கிராமத்தின் அருகே உள்ள ஈளாடாவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது46). கூலித்தொழி லாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. சிவக்குமாரின் மனைவி மற்றும் இளைய மகள் ஆகியோர் அன்னூரில் வசித்து வருகின்றனர்.
சிவக்குமார் தனது தாயுடன் ஈளாடாவில் வசித்து வந்தார்.கடந்த 18-ந் தேதி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற சிவக்கு மார் மாலை வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. இதுகுறித்து அவரின் தாய் சிவக்குமாரின் மகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் தனது தாயுடன் ஈளாடாவிற்கு விரைந்து வந்து, அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடிய வில்லை. இதையடுத்து அவர் சம்ப வம் குறித்து சோலூர்மட்டம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிவக்குமாரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சிவக்குமாரின் மகளுக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய பெண் ஒருவர், உனது தந்தையை எனது கணவர் கொன்று பொன்னூர் பகுதியில் புதைத்து விட்டதாக கூறுகிறார் என்ற தகவலை தெரிவித்தார்.
இதை கேட்டதும் அதிர்ச்சியான அவர் உடனடியாக சோலூர்மட்டம் போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தார். அதன்பேரில் குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பொன்னூர் பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அந்த பெண் கூறிய சாலையோரம் இருந்த வனப்பகுதியை யொட்டிய நிலத்தை தோண்டி பார்த்த போது, சிவக்குமார் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவரின் உடலை வெளியில் எடுத்தனர்.பின்னர் சிவக்குமாரின் மகளை தொடர்பு கொண்டு பேசிய பெண் யார் என்பது குறித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் காரைக்குடியை சேர்ந்தவர் என்பதும், அவரது கணவரான விஷ்ணு என்பவர் தான் சிவக்குமாரை கொன்று புதைத்ததும் தெரியவந்தது.
உடனடியாக போலீசார் காரைக்குடிக்கு விரைந்து சென்று, அங்கு மனைவி வீட்டில் பதுங்கி இருந்த விஷ்ணுவை கைது செய்த னர்.பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியி ருப்பதாவது:-
நான் கேரடாமட்டம் பிரியா காலனியில் வசித்து வருகிறேன். நான் எனது நண்பர் தங்கபாண்டி மற்றும் சிவக்குமார் 3 பேரும் ஒன்றாக வேலைக்கு சென்று வந்தோம்.வார விடுமுறை நாட்கள் மற்றும் சில நேரங்களில் ஒன்றாக சேர்ந்து மது அருந்த செல்வது வழக்கம். கடந்த 18-ந் தேதி வேலை முடிந்த பின்னர் 3 பேரும் மது அருந்த முடிவு செய்தோம்.
அதன்படி நாங்கள் வேலை முடிந்தவுடன் டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி கொண்டு, பொன்னூர் பகுதியையொட்டிய வனப்பகுதிக்கு சென்றோம். அங்கு ஒன்றாக அமர்ந்து மது அருந்தினோம். மது அருந்திய சில நிமிடங்களில் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, சிவக்குமார் எனது தாயை பற்றி தவறாக பேசினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
நான் அவரிடம் அப்படி பேசாதே என்று சொல்லியும் கேட்காமல் அவர் தொடர்ந்து பேசி கொண்டே இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், எனது நண்பர் தங்கபாண்டியுடன் சேர்ந்து அங்கிருந்த கல்லை எடுத்து சிவக்குமாரின் தலையில் தாக்கினேன். இதில் அவர் சிறிது நேரத்தில் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்து இறந்து விட்டார். பின்னர் நாங்கள் 2 பேரும் சேர்ந்து அவரது உடலை அங்கேயே குழி தோண்டி புதைத்து விட்டு எதுவும் தெரியாதது போல் சென்று விட்டோம்.
அங்கிருந்தால் மாட்டிக்கொள்வோம் என்ப தால், நான் கோத்தகிரியில் இருந்து காரைக்குடியில் உள்ள எனது மனைவி வீட்டிற்கு சென்றேன். அப்போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் கோபம் கொண்ட நான், இப்போது தான் ஒருவரை கொலை செய்து விட்டு புதைத்து வருகிறேன். அதே போன்று உன்னையும் கொன்று புதைத்து விடுவேன் என கூறினேன். அவர் என்னிடம் துருவி விசாரித்து தகவலை போலீசாருக்கு தெரிவித்த தால் நான் போலீசில் சிக்கி கொண்டேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் விஷ்ணு கொடுத்த தகவலின் பேரில் அவரது நண்பரான தங்கபாண்டியனையும் கைது செய்தனர். கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவ டிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே இன்று காலை இறந்த சிவக்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. கூலித்தொழிலாளி அடித்து கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் கோத்தகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.