உள்ளூர் செய்திகள்

வன உயிரியல் சரணாலயம் அமைப்பது குறித்து கருத்துகேட்பு கூட்டங்கள் நடத்த வேண்டும் -தாசில்தாரிடம், விவசாயிகள் சங்கம் கோரிக்கை

Published On 2022-11-22 15:34 IST   |   Update On 2022-11-22 15:34:00 IST
  • 165 கிராம மக்களின் வாழ்விடம் அமைந்துள்ளது.
  • 2006 வன மசோதா சட்டத்தின் அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேன்கனிக்கோட்டை,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா தாசில்தாருக்கு மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

மாநில அரசு காவிரி தெற்கு வன உயிரின சரணாலயம் அமைப்பதற்கு கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் 686.405 சதுர கி.மீ., பரப்பில் திட்டமிட்டு அரசாணை அறிவித்துள்ளது. இத்திட்ட பகுதிக்குள் 165 கிராம மக்களின் வாழ்விடம் அமைந்துள்ளது. மேற்கண்ட திட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா பகுதியும் உள்ளடக்கியதாகும்.

எனவே இத்திட்ட அமலாக்கத்தின்போது எல்லைக்குள் வசிக்கும் கிராம மக்கள் மற்றும் வனத்தை ஒட்டி வாழும் பழங்குடியினர் மற்றும் கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரி தெற்கு வன உயிரியல் சரணாலயம் அமைப்பது குறித்து பழங்குடியினர், விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் மத்தியில் திட்டம் குறித்து விளக்கம் அளித்து கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும். பூர்வீகமாக மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மக்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்காதவண்ணம், குடிமனைப்பட்டா, அனுபவ நிலங்களுக்கு பட்டா உள்ளிட்டவை 2006 வன மசோதா சட்டத்தின் அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கனவே வனச்சரனாலயங்கள் அமைக்கும்பொழுது பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் 3 கி.மீ., தூரம் வாழ்விடத்திலிருந்து தள்ளி அவர்களின் வாழ்வா தாரம் பாதிப்பில்லாமல் அமைத்திட உச்ச நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது. அதனடிப்படையில் திட்டம் அமல் படுத்த வேண்டும்.

பாரம்பரிய காடுகளில் கால்நடைகள் வைத்து வரும் விவசாயிகளுக்கு பட்டிபாஸ் மற்றும் மேய்ச்சல் பாஸ் வழங்க வேண்டும். வனத்தையொட்டி 1 கி.மீ., தூரத்திற்கு மேய்ச்சல் உரிமை என்பதை அமலாக்கிட வேண்டும். வன ஓர இடங்களில் சாகுபடி செய்து வரும் நிலங்களை விட்டு விவசாயிகளை வெளியேற்றக்கூடாது.

காடுகளில் சிறு மகசூல் சேகரிக்க 2006 வன மசோதா சட்டப்படி அனுமதிக்க வேண்டும். மேய்ச்சலுக்கான பகுதிகளை வனச்சரனாலயங்கள் உள்ள பகுதிகளை வனத்துறை அனுமதி அளித்து ஒதுக்கித்தர மதுரை உயர்நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது. எனவே நமது மாவட்டத்திலும் அதற்கான நடைமுறைகளை அமலாக்க வேண்டும். வனப்பகுதிக்குள் வனத்துறையினர் கட்டணம் வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.

காட்டிற்குள் சென்று வர விவசாயிகள் பயன்படுத்தும் பாரம்பரியமான பாதை களை அடைக்கக்கூடாது. இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News