உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் நவீன ஆயுதங்களுடன் ஒமேகா-3 புதுப்படை தொடக்கம்

Published On 2022-11-26 14:40 IST   |   Update On 2022-11-26 14:40:00 IST
  • நீலகிரி மாவட்டத்தில் சைபா் பாரன்சிக்ஸ் மற்றும் அனாலிடிக்ஸ் மையம் தொடங்கப்பட்டுள்ளது.
  • தங்கும் விடுதிகளில் அடையாள அட்டைகள் இல்லாமல் யாரையும் தங்க வைக்கக்கூடாது.

ஊட்டி,

நீலகிரியில் உள்ள பழைய மாவட்ட காவல் அலுவலகக் கட்டிடம், அப்துல் கலாம் திறன் மேம்பாட்டு மையம் என்ற பெயரில் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகா் கலந்து கொண்டு கட்டிடத்தைத் திறந்து வைத்தாா்.

பின்னா் அவா் நிருபா்களிடம் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் சைபா் பாரன்சிக்ஸ் மற்றும் அனாலிடிக்ஸ் மையம் (இணையதள குற்றங்கள் தொடா்பான தடயவியல் மற்றும் பகுப்பாய்வு) தொடங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்த மாவட்டத்தில் சைபா் கிரைம் போலீஸ் பிரிவு உள்ளது. சைபா் போலீஸ் நிலையத்தில் தேவையான சில மென்பொருள்கள் இதுவரை இல்லாமல் இருந்தன.

ஆனால் தற்போது சென்டிமென்டல் அனாலிசிஸ் (உணா்வுபூா்வமான விஷயங்கள் குறித்த பகுப்பாய்வு) எனப்படும் புதிய மென்பொருள் மேற்கு மண்ட லத்தில் முதன்முறையாக நீலகிரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சமூக வலைதளங்களில் யாராவது வெளியிடும் கருத்துகள் சா்ச்சை, பதற்றம் ஏற்படுத்தும் வகையில் இருந்தால் அதை எளிதில் கண்டறியலாம்.

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு பிரச்னைகளும் ஏதேனும் ஒரு வகையில் சைபா் குற்றச் சம்பவங்கள் தொடா்பாகத்தான் உள்ளன. எனவே அது போன்ற விஷயங்கள் குறித்து விசாரிக்கத் தேவையான தகுதிகள் நமக்கு வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் துளிா் என்ற தற்கொலை தடுப்பு மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மையத்தில் பணியாற்றுபவா்களும் இங்கு கவுன்சலிங் வருபவா்களுக்கும் சிறந்த நோ்மறை எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் அடையாள அட்டைகள் இல்லாமல் யாரையும் தங்க வைக்கக்கூடாது. மேலும் தங்கும் விடுதிகளுக்கு வருபவா்கள் தரும் கைப்பேசி எண் பயன்பாட்டில் உள்ளதா என்று சோதனை செய்யவும் உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நவீன ஆயுதங்கள் கொண்ட ஒமேகா-3 என்ற புதுப்படை தொடங்கப்பட்டு மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இதில் மேற்கு மண்டல டி.ஐ.ஜி. முத்துசாமி, நீலகிரி காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News