உள்ளூர் செய்திகள்

கொலையுண்ட மூதாட்டி சின்னம்மாள்.

கழுத்தை இறுக்கி மூதாட்டி கொலை: கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு

Published On 2022-07-31 14:38 IST   |   Update On 2022-07-31 14:38:00 IST
  • இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
  • சின்னம்மாள் வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள தெசவிளக்கு வடக்கு கிராமம் துட்டம்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி சின்னம்மாள் (வயது 70). இந்த தம்பதிக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. கந்தசாமி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

நகைக்காக கொலை

இதனால் சின்னம்மாள் துட்டம்பட்டியில் உள்ள தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். இவர் தினமும் துட்டம்பட்டி வக்கீல்காடு பகுதியில் உள்ள தோட்டத்துக்கு சென்று விட்டு, மாலை வீட்டுக்கு வருவது வழக்கம்.

அதன்படி நேற்று அவர் தோட்டத்துக்கு சென்றார். பின்னர் இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சின்னம்மாளின் பேரனான விஜயகுமார் இரவு 9 மணி அளவில் தோட்டத்துக்கு வந்து அவரை தேடினார். அப்போது அங்கிருந்த மோட்டார் அறைக்குள் சென்று பார்த்தார். அங்கு சின்னம்மாள் வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி, காதில் அணிந்திருந்த தோடு உள்பட 13 பவுன் நகைகள் கொள்ளைய–டிக்கப்பட்டிருந்தன.

தனிப்படை அமைப்பு

இது பற்றி தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய தனிப்படை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் உத்தரவிட்டுள்ளார்.

அதன்பேரில் ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா மற்றும் தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார், கொலையாளிகள் குறித்து வக்கீல்காடு பகுதியில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழைய கொள்ளையர்களா?

நகைக்காக இந்த கொலை நடந்துள்ளதால் பழைய கொள்ளையர்கள் இந்த கொலையை செய்தார்களா? என கண்டுபிடிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆகவே ஏற்கனவே கைதாகி ஜெயிலில் இருந்து வெளியே வந்த கொள்ளையர்கள், வழிப்பறி திருடர்களிடம் விசாரித்து வருகிறார்கள். 

Tags:    

Similar News