உள்ளூர் செய்திகள்

வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் சபரிநாதன் மற்றும் உதவி பொறியாளர்கள் ஏரிக்கரையை பார்வையிட்டனர். 

வேப்பனபள்ளி அருகே ஏரிக்கரை உடையும் அபாயம்

Published On 2022-12-16 15:38 IST   |   Update On 2022-12-16 15:38:00 IST
  • சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் தாசிரிப்பள்ளி ஏரி அமைந்துள்ளது.
  • நீரில் மூழ்கி அழிந்து விடும் என விவசாயிகள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாடுவனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தாசிரிப்பள்ளி கிராமத்தில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் தாசிரிப்பள்ளி ஏரி அமைந்துள்ளது.

இந்த ஏரியில் பல வருடங்களாக நீர் இல்லாமல் இருந்த நிலையில் மாவட்டத்தில் கடந்த ஒரு வருடமாக பெய்த கன மழை காரணமாக ஏரி முழு கொள்ளளவு எட்டியுள்ளது.

இந்த நிலையில் ஏரியில் பல ஆண்டுகளாக மதுகுகள் சீரமைக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது முழு கொள்ளளவை ஏரி எட்டியுள்ளதால் மதுகுகள் பராமரிப்பின்றி சிதலம் அடைந்துள்ளது.

இதனால் தற்போது ஏரிக்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வெளியே வருகிறது. தொடர்ந்து இந்த மண்ணரிப்பு அதிகரித்து வருவதால் ஓரிரு நாட்களில் ஏரியின் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உடைந்தால் தாசிரிப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் உள்ள சுமார் 250 ஏக்கர் விவசாய நிலங்கள் முழுவதும் நீரில் மூழ்கி அழிந்து விடும் என விவசாயிகள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்த தகவல் அறிந்து ஏரிக்கரைக்கு வந்த வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் சபரிநாதன் மற்றும் உதவி பொறியாளர்கள் ஏரிக்கரையை பார்வையிட்டனர்.

பின்னர் ஏரிக்கரை உடையும் ஆபத்தை தடுக்க ஏரிக்கரையில் மணல் மூட்டைகளை அமைக்க உத்தரவிட்டுள்ளனர்.

இருப்பினும் ஏரி கரை உடையும் அபாயம் ஏற்பட்டதால் தாசரிப்பள்ளி மேலூர்கொட்டாய், நெடுஞ்சாலை சுற்று வட்டார கிராம மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

Similar News